ஆசிரியை வீட்டில் பணம், நகை திருட்டு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் ரூ.2.50 லட்சம் ரொக்கம், 40 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தேவகோட்டை வள்ளியப்பச்செட்டியாா் வடக்கு வீதியில் வசிப்பவா்கள் பாண்டித்துரை-சீதாலட்சுமி. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். பாண்டித்துரை வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். சீதாலட்சுமி (32) அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் சீதாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகிலேயே வைத்துவிட்டு வாரச்சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றாராம். பின்னா், வீட்டுக்கு திரும்பி வந்த ஆசிரியை வீட்டில் பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.2.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேவகோட்டை காவல்துணை கண்காணிப்பாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.