சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடி...
ஆத்தூர் டு நெதர்லாந்து: "போதுமென்ற Comfort Zone மனநிலைக்கு அப்பால்" - சாதித்த முனைவர் ராஜ ப்ரியா
ஆத்தூர் - நெதர்லாந்து!
ஆத்தூரில் ஒரு சிறு கிராமத்தில் தொடங்கி, பிரேசில், ஃபின்லாந்து, நெதர்லாந்து என உலகளாவிய கல்வி, ஆராய்ச்சி மேடையில் தனித்துவமான பயணமாக விரிந்திருக்கிறது முனைவர் ராஜ ப்ரியாவின் வாழ்க்கைக் கதை. ஆய்வு துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் அவரிடம் ஒரு நண்பகல் நேரத்தில் பேசினேன்.
“என் அப்பா நான் ரெண்டரை வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். பின்னர் தாத்தா சிறிது காலம் கவனித்துக்கொண்டார். ஆனால், அவரும் விபத்தில் மரணமடைய, எங்கள் குடும்பம் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டது.
இருப்பினும், அம்மா மனம் தளராமல் தனியாக நின்று என்னை வளர்த்தார். வீட்டில் யாரும் பள்ளிக்கூடம் முடிக்கவில்லை. ஆனால், அம்மா என்னைப் படிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்காக உறுதியாக உழைத்தார்” என்று தனது கதையைத் தொடங்கும் ராஜ ப்ரியாவின் குரலில் தெளிவும், தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கையும் தொனிக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ ப்ரியா. இளம் பருவத்தில் தனியாகப் போராடிய அவரது தாயார், பசுக்களை வளர்த்து, பால் கறந்து விற்று குடும்பத்தைத் தாங்கினார். ‘கல்வி மட்டுமே நம் குடும்பத்தை முன்னேற்றும்’ என்ற எண்ணம் ராஜ ப்ரியாவுக்கு அப்போதே விதைக்கப்பட்டிருக்கிறது.
“அம்மா அந்தக் காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருந்தபோது, ‘பெண் குழந்தையை ஏன் இவ்வளவு படிக்க வைக்கிறாய்?’ என்று சுற்றியிருந்தவர்கள் கேட்டாலும், என் படிப்புக்கு எப்போதும் துணையாக இருந்தார். எங்கள் சுற்றத்தில் படிப்பு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை.
ஆனால், அம்மாவுக்கு என் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. ‘நீ படித்து முன்னேறி, நம் வாழ்க்கையை மாற்ற வேண்டும்’ என்று சொல்வார். அப்பா இல்லாத குறையை அம்மா தனியாக நிரப்பினார். அவரது தைரியம் எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது” என்று நன்றியுணர்வுடன் பேசும் ராஜ ப்ரியாவின் குரல் உணர்ச்சிகளால் உடைகிறது.
கிராமத்து அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்ற ராஜ ப்ரியா, படிப்பில் சிறந்து விளங்கினார். பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 92% மதிப்பெண்களும் பெற்றார்.
“ஆனால், அதற்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் என்று யாரும் வழிகாட்டவில்லை. ஒரு தூரத்து உறவினர் ‘சிவில் இன்ஜினியரிங் படி’ என்று அறிவுறுத்தினார். கல்விக் கடன் மூலம் சென்னையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பயின்றேன்.
மீண்டும் ‘பெண்கள் இவ்வளவு படிக்க வேண்டாம்’ என்று சுற்றியிருந்தவர்கள் கூறினர். ஆனால், எனக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. அவர்கள் முன்னால் சாதித்துக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன், 83% மதிப்பெண்களுடன் முதல் தலைமுறை பட்டதரியாக பட்டம் பெற்றேன்,” என்று சொன்னவரின் வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி.
பட்டப்படிப்பை முடித்தவுடன் ஒரு ஆண்டு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். “இது போதாது என்ற எண்ணம் வர, மேலும் படிக்க வேண்டும் என்று ஆசை தோன்றியது.
அங்கேயே நிறுத்த விரும்பாமல் அதே கல்லூரியில் எம்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட் பயின்றேன். என்னைப் படிக்க வைக்க யாரையும் கஷ்டப்படுத்தவில்லை.

பல்கலைக்கழகத் தேர்வில் 14-வது இடம் பெற்றதால் மெரிட் அடிப்படையில் இடம் கிடைத்தது,” என்று கூறும் ராஜ ப்ரியா, உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற, அடுத்தடுத்த கதவுகள் திறந்திருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு அண்ணா சென்டெனரி ரிசர்ச் பெல்லோஷிப் கிடைத்திருக்கிறது. சுரங்கக் கழிவுகளை மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால், கொரோனா பெருந்தொற்று குறுக்கே வர ஆராய்ச்சி காலம் நீண்டிருக்கிறது.
பிரேசிலில், தொழிற்சாலைக் கழிவுகளை கான்கிரீட் தயாரிக்கப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்தவர், 2024-ல் ஐரோப்பிய ஆணையத்தின் மேரி ஸ்க்லோடோவ்ஸ்கா-கியூரி ஆக்ஷன்ஸ் (MSCA) பெல்லோஷிப்பை 100% மதிப்பெண்களுடன் பெற்றார். இது உலகளவில் மிகவும் மதிப்புமிக்க ஆராய்ச்சி பெல்லோஷிப்புகளில் ஒன்று.
இதன் மூலம் 2.8 கோடி ரூபாய் நிதி பெற்று, ஃபின்லாந்தில் உள்ள ஓலு பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு ஆராய்ச்சியையும், பின்னர் நெதர்லாந்தில் ஆறு மாத தொழில்துறை பயிற்சியையும் மேற்கொள்ள உள்ளார்.
“கட்டுமான இடிப்புக் கழிவுகளை சிமென்ட் பொருளாக மாற்றுவது குறித்து ஆராய உள்ளேன். இது சுற்றுச்சூழல் பாதிப்பையும், அதீத செலவுகளையும் குறைத்து, துறை சார்ந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்,” என்பவரின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.

“மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய ஆய்வு நான்கு ஆண்டுகளாகியது. பொருளாதாரச் சிக்கல்களும், சமூக அழுத்தங்களும் இருந்தன. கல்விக் கடன் வாங்கிய வங்கி மேலாளர்கள் கூட ‘இவ்வளவு படிக்க வேண்டாம்’ என்று கூறினர். ஆனால், நான் முயற்சியை விடவில்லை,” என்று கூறும் ராஜ ப்ரியா, இந்தக் காலகட்டத்தில் 10 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டு, ஒரு இந்திய பேட்டன்ட்டும் பெற்றார். குடும்பத்தின் முதல் பட்டதாரியாக மட்டுமல்லாமல், ‘டாக்டர் ராஜ ப்ரியா’ என்ற பெருமிதத்துடன் முனைவர் பட்டம் பெற்று, மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி கல்விக் கடனை அடைத்தார்.
“என் ஆய்வை விரிவாக்க, தினமும் லிங்க்டின் வழியாக உலகம் முழுவதும் உள்ள 300-400 பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். அதன் விளைவாக, பிரேசில் அரசின் மதிப்புமிக்க பெல்லோஷிப் கிடைத்தது,” என்று கூறும் ராஜ ப்ரியா, வாய்ப்புகளைத் தேட மறுப்பது உயர் லட்சியங்களுக்குத் தடையாகிறது என்கிறார்.
“நம் பொதுமென்ற comfort zone மனநிலைக்கு அப்பால் சிந்தித்தால், உலகை நம் பக்கம் திருப்ப முடியும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
தன்னோடு பயின்றவர்கள் அதிக வருமானத்தில் பணியாற்றியபோது, பலர் வேலை செய்ய அறிவுறுத்தியதை நினைவு கூறுபவர், ஆராய்ச்சித் துறையில் வளர, பொறுமை அவசியம் என்கிறார் ராஜ ப்ரியா.
“எனது இலக்கு பெரியது, அதற்குத் தேவையான நேரமும் அதிகம் என்று முடிவு செய்தேன்,” என்று கூறும் அவர், வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு, “காத்திருத்தலும் உழைப்பும்தான் உங்கள் வெற்றிக்கு முதலீடு" என்கிறார்.

“என் கணவர் எப்போதும் என் கனவுகளுக்கு துணையாக இருக்கிறார். அம்மா என்ன உருவாக்க மிகவும் கஷ்டப்பட்டார். இனி அவருக்கு எந்தக் கவலையும் இருக்கக் கூடாது. அவரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கிராமத்திலிருந்து வந்தாலும், கடின உழைப்பும் ஆதரவும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். பல தடைகள் வந்தாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சி என்பது ஒரு கலை; அதற்குப் பொறுப்பு உள்ளது. சமூகத்துக்கு நல்லது செய்ய விரும்புபவர்கள், தங்கள் துறையில் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். அப்போதுதான் உண்மையான மாற்றம் வரும்,” என்றவர் பெரும்நம்பிக்கையோடு நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.