வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 13 வீரா்களுக்கு ரூ. 5.99 லட்சம் நிதி: துணைமுதல...
`இலவச முடி திருத்தும் நிலையம்' மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் தன்னார்வ அமைப்பு..!
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையம் வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் தொடங்கப்பட்டுள்ளது.
'தலைமுறை பேரவை' என்ற தன்னார்வ அமைப்பால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட இந்த கடையானது, 250 சதுர அடி பரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதியோடு அமைந்துள்ளது.
'தலைமுறை பேரவை' தன்னார்வ அமைப்பின் உறுப்பினர் பூமிநாதன் இது குறித்து கூறுகையில், "தலைமுறை பேரவை தொடர்ந்து பல்வேறு நலத் திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சை போன்றவற்றை நடத்தி இருக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த எங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் நகர பகுதிகளில் ராஜா என்னும் முடி திருத்தும் நபர் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறார் என அறிந்தோம். இவரை பற்றி விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் G.V. செல்வம் அவர்கள் அறிந்து இருந்தார். அவர் தான் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையத்தை தொடங்கலாம் என்ற ஆலோசனை வழங்கினார்.
எனவே அவருடைய ஆலோசனையின் படி இந்தியாவிலேயே முன் உதாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இலவச முடி திருத்தும் நிலையத்தை தொடங்கி உள்ளோம். இதற்காக ஏற்கெனவே சேவை செய்து வந்த ராஜா என்பவரை இதில் இணைத்துள்ளோம். அவர்களுக்கென பிரத்தியேகமாக இங்கு நாற்காலிகளை அமைத்துள்ளோம். மேலும் அவர்கள் வந்து செல்ல ஏதுவாக வீல் சேர் வசதியும் செய்து வைத்துள்ளோம். இதனால் இந்தப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.
இது குறித்து வேலூர் மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள 37 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளில் சுமார் 14,000 மாற்றுத்திறனாளிகள் வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட வேலூர் தாலுகாவில் தான் உள்ளனர். அவர்களுக்கு இந்த சேவை என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் முடி திருத்தும் நிபுணர்கள் வீடுகளுக்கு வரவழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முடி வெட்டுவதால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான முடி திருத்தும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருவது என்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
"இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் இதனுடைய வரவேற்பினை பொறுத்து இந்த சேவை விரிவாக்கப்படும்" என்று 'தலைமுறை பேரவை' தன்னார்வ அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.