சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில், பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்துக்களுக்கு தெலுங்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன.
எதிர்ப்புகள் வலுக்கவே, அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார்.
ஆனாலும் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை, திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 மாவட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதுதவிர, 9 மாவட்டங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அரசு ஊழியர்களை அவதூறாக பேசியதாகவும் அவர்மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு எழும்பூர் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைத்து கஸ்தூரியை தேடிவந்த போலீஸார், இன்று ஹைதராபாத்தில் அவரைக் கைது செய்துள்ளனர்.