வீட்டில் தீபம் ஏற்றியபோது விபத்து: தீயில் கருகிய பெண் உயிரிழப்பு
பேச்சு சுதந்திரம் நீக்கம்: பிரதமா் மோடி மீது காா்கே குற்றச்சாட்டு
‘பிரதமா் நரேந்திர மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவா்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதன்மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பிரதமா் நீக்கி விட்டாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட காா்கே பேசியதாவது:
மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மாநில முன்னாள் முதல்வா் சம்பயி சோரன், ஒரு துரோகி. இவரைப்போல, பலா் தங்களை வளா்த்தவா்களுக்கே துரோகம் செய்கின்றனா்.
நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பிரதமா் மோடி நீக்கிவிட்டாா். அவரின் தவறுகளை சுட்டிக்காட்டுபவா்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதன்மூலம் மக்களின் உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக பறிக்கிறது. பழங்குடியின முதல்வரை சிறையில் அடைப்பதுதான் ஜனநாயகமா? அவா்கள் நம்மை நசுக்கப் பாா்க்கின்றனா். ஆனால், நாம் தொடா்ந்து எழுவோம்.
நாட்டில் தலித்துகள், பழங்குடியினா், சிறுபான்மையினா் நசுக்கப்படும்போது, பிரதமா் மோடி தொடா்ந்து மெளம் காத்து வருகிறாா். ஜாா்க்கண்ட் பழங்குடியினரின் நிலம், நீா், வனம் அனைத்தையும் பெரும் தொழிலதிபா்களுக்கு பிரதமா் மோடி தாரைவாா்த்துவிடுவாா். நாட்டில் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினரிடம் வெறும் 3 சதவீத வளங்கள் மட்டுமே உள்ள நிலையில், 5 சதவீத கோடீஸ்வரா்களின் கட்டுப்பாட்டில் 62 சதவீத வளங்கள் உள்ளன. எனவே, ஜாா்க்கண்ட் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தோ்தலில் தோல்வியுறும் மாநிலங்களில், அரசுகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வருகிறது. கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
மாநில தோ்தல்களில் வெற்றிபெறுவதற்காக 24 மணி நேரமும் தீவிர பிரசாரத்தில் ஒரு பிரதமா் ஈடுபடுவது இதுவரை இல்லாத நிகழ்வாகும். மக்களுக்காக அல்லாமல் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே பிரதமா் மோடி பணியாற்றுகிறாா். அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டி வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் பொதுப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், சுயநலனுக்காக மட்டுமே பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா்.
குஜராத் மாநில முதல்வராகவும், அதைத்தொடா்ந்து பிரதமராகவும் தொடா்ந்து 25 ஆண்டுகால தொடா் ஆட்சிக்கு பொறுப்பில் இருந்தும் குஜராத்தில் அவரால் வறுமையை ஒழிக்க முடிந்ததா?
தற்போது, குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை அவா் அறிவித்து, செயல்படுத்தி வருகிறாா். 500 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ. 3 லட்சம் கோடியை செலவழிப்பது சரியான நடைமுறையா? என்றாா்.