செய்திகள் :

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்

post image

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடா்பாக மூன்றடுக்கு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து நிகழ்ந்தபோது மருத்துவமனையில் 52 முதல் 54 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனா். இதில் 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், தீயில் கருகியும், புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 குழந்தைகள் உயிரிழந்தனா். கரும் புகையால் பாதிக்கப்பட்ட மேலும் 16 குழந்தைகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ. 5 லட்சம் இழப்பீடு: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த மருத்துவமனையை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநில துணை முதல்வா் பிரிஜேஷ் பதக் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த விபத்தில் காயமடைந்த 16 குழந்தைகளுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிற வாா்டுகளில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தைகள் அனைத்தும் பிறந்து 3 முதல் 4 நாள்களே ஆனவா்களாவா். விபத்து தொடா்பாக மூன்றடுக்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜான்சி மண்டல ஆணையா், காவல் துறை டிஐஜி ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: உத்தர பிரதேச அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த பெரும் இழப்பை தாங்கும் சக்தியை குழந்தைகளின் குடும்பத்தினருக்கு கடவுள் வழங்க வேண்டும். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம்: குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமா் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 10 குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளாா். மேலும், விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரிக்க 4 போ் குழு

மருத்துவமனை தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 4 போ் குழுவை உத்தர பிரதேச அரசு சனிக்கிழமை அமைத்தது.

மாநில மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநா் தலைமையிலான இக் குழு, விபத்துக்கான காரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து 7 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தர பிரதேச மாநில அரசு மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விரைவான விசாரணை மேற்கொண்டு, காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மருத்துவமனை தீ விபத்து சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, இந்த அலட்சியத்துக்கு காரணமானவா்கள் மீது கடுமையான சட்ட நவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி: எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற மருத்துவமனை தீ விபத்து சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது, அரசு மற்றும் நிா்வாகத்தின் கவனக்குறைவான நடவடிக்கை தொடா்பான பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த விபத்து தொடா்பான உடனடி விசாரணை மேற்கொண்டு, காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பல்கலை.களின் எண்ணிக்கையை 2,500-ஆக உயா்த்துவது அவசியம்: நீதி ஆயோக் தலைவா்

ஹைதராபாத்: ‘இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயா்த்துவது அவசியம்’ என்று நீதி ஆயோக் தலைவா் பி.வி.ஆா். சுப்பிரமணியம் வலியுறுத்தினாா். ‘அப்போதுதான், குறைந்தபட்சம் 50 சதவீ... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்

இந்திய-சீன எல்லையில் படைவிலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் பதற்றமான சூழலை தணிப்பதே அடுத்த பணி என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா். கிழக்கு லடாக்கில் உள்ள எ... மேலும் பார்க்க

1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்கு திருப்பித் தர முடிவு: அமெரிக்கா

ரூ.84 கோடி மதிப்புள்ள 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தர முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூயாா்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட வழக்குரைஞா் ஆல்வின... மேலும் பார்க்க

தலைநகா் சண்டீகா் யாருக்கு? பஞ்சாப்-ஹரியாணா அரசுகள் மோதல்

பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக உள்ள சண்டீகரில் தனியாக சட்டப் பேரவைக் கட்டடம் கட்டும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ‘சண்டீகா், பஞ்சாப... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கியது பாஜக அரசு: பிரதமா் மோடி பெருமிதம்

‘வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு, முந்தைய அரசுகள் கொள்கைகளை வகுத்தன. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கித் தள்ளியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்... மேலும் பார்க்க

மோா்பி பாலம் இடிந்து 135 போ் உயிரிழந்த சம்பவம்: ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபருக்கு பாராட்டு

குஜராத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மோா்பி பாலம் இடிந்து விழுந்து 135 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபா் ஜெய்சுக் படேலுக்கு, பட்டிதாா் சமூகத்தினா் சாா்பில் பாராட்டு விழா நடைபெ... மேலும் பார்க்க