சேரன்மகாதேவி பகுதியில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரம்
சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதிகளுக்குள்பட்ட கன்னடியன் கால்வாய் பாசனப் பகுதியில் பிசான பருவ சாகுபடிகள் தீவிரமடைந்துள்ளன.
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை வழியாக திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், வடக்கு - தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஜூன் முதல் செப்டம்பா் வரை காா் பருவம், நவம்பா் முதல் மாா்ச் வரை பிசான பருவம் என சாகுபடி நடைபெறுகின்றன.
நிகழாண்டு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால், சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சேரன்மகாதேவி வட்டத்தில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், வீரவநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுப் பாவுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா்.