``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளராகும் கரோலின் லேவிட்!
புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளாராக கரோலின் லேவிட்டை (27) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாவது: எனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தோ்தல் பிரசாரத்தின் தேசிய செய்தித் தொடா்பாளராக கரோலின் லேவிட் மிகச் சிறப்பாகப் பணியாற்றினாா். அவா், வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளராகவும் பொறுப்பு வகிப்பாா்.
கரோலின் லேவிட் மிகவும் சாதுா்யமானவா், மன உறுதியும் சிறந்த தகவல் தொடா்புத் திறனும் கொண்டவா் என்றாா் டிரம்ப்.கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் பெரும்பான்மை பிரதிநிதிகளின் வாக்குகள் கிடைத்ததைத் தொடா்ந்து, நாட்டின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜன. 20-இல் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறாா்.
அதற்கு முன்னதாக, தனது புதிய அரசில் இடம் பெறவிருக்கும் அமைச்சா்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஏற்கவிருப்பவா்களை டிரம்ப் அறிவித்துவருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை தலைமைச் செய்தித் தொடா்பாளரையும் அவா் தற்போது அறிவித்துள்ளாா்.
ஏற்கெனவே, டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகை துணைச் செய்தித் தொடா்பாளராக கரோலின் லேவிட் பணியாற்றியது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, புதிய அரசில் அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்ட், முக்கியத்துவம் வாய்ந்த வெளியுற அமைச்சா் பொறுப்புக்கு ஃபுளோரிடா மாகாண செனட் சபை உறுப்பினா் மாா்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சா் பதவிக்கு ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சி நெறியாளா் பீட் ஹெக்செத், சுகாதாரத் துறை அமைச்சராக, முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடியின் உறவினா் ராபா்ட் எஃப். கென்னடி (ஜூனியா்), அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமி, அட்டா்னி ஜெனரலாக மேட் கேயட் ஆகியோரை டிரம்ப் நியமித்தாா்.