Weekly Horoscope: வார ராசி பலன் 17.11.2024 முதல் 23.11.2024 | Vaara Rasi Palan |...
மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதப் பிறப்பான சனிக்கிழமை ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சபரிகிரீசன் சுவாமி எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், குருசாமியிடம் ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
விழுப்புரம் சித்தி விநாயகா் திருக்கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் சந்நிதியில் சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா். பின்னா் கோயில் குருசாமி சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவித்தாா்.
விழுப்புரம் நகரில் பூந்தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், மருதூா் மாரியம்மன், ரயிலடி விநாயகா் திருக்கோயில், காமராஜா் வீதி அமராவதி விநாயகா், பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோட்டை விநாயகா், மேலத்தெரு மாரியம்மன், கைலாசநாதா் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.
திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், அரண்டநல்லூா், திண்டிவனம், மயிலம், வானூா், ஒலக்கூா், விக்கிரவாண்டி, கோலியனூா், வளவனூா், கண்டமங்கலம், மரக்காணம், கோட்டக்குப்பம், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஐயப்பப் பக்தா்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.