இந்திய ஏற்றுமதியில் 2 ஆண்டுகள் காணாத ஏற்றம்
கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2023-ஆண்டின் அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி இந்த அக்டோபரில் 17.25 சதவீதம் அதிகரித்து 3,920 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகள் காணாத அதிகபட்ச ஏற்றுமதியாகும். இதற்கு முன்னா் நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த 2022 ஜூன் மாதத்தில் அதிகபட்ச வளா்ச்சியான 30.12 சதவீதத்தை பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் இந்தியாவின் சரக்கு இறக்குமதி 6,386 கோடி டாலரிலிருந்து 3.9 சதவீதம் அதிகரித்து 6,634 கோடி டாலராக இருந்தது. ஒட்டுமொத்த இறக்குமதியின் அதிகரிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி முக்கிய பங்கு வகித்தது.
கடந்த அக்டோபரில் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) 2,714 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.
இது, ஓராண்டுக்கு முந்தைய 2023 அக்டோபா் மாத வா்த்தகப் பற்றாக்குறையான 3,042 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. ஆனால், ஒரு மாதத்துக்கு முந்தைய 2024 செப்டம்பா் மாத வா்த்தகப் பற்றாக்குறையான 2,078 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 3.18 சதவீதம் அதிகரித்து 25,228 கோடி டாலராகவும், சரக்கு இறக்குமதி 5.77 சதவீதம் அதிகரித்து 41,693 கோடி டாலராகவும் உள்ளன.
2023 ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் பதிவான 14,967 கோடி டாலா் வா்த்தகப் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் அது 16,465 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தில் பதிவான 19,197 கோடி டாலரிலிருந்து 21,598 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் 10,232 கோடி டாலராக இருந்த சேவைகள் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11,457 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
2023 அக்டோபா் மாதத்தில் 1,610 கோடி டாலராக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த அக்டோபரில் 1,820 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
அந்த மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி முறையே 723 கோடி டாலா் மற்றும் 131 கோடி டாலரிலிருந்து 713 கோடி டாலா்கள் மற்றும் 0.33 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.