‘பருவநிலை மாநாடுகளால் இனி பலனொன்றுமில்லை!’
‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை’ என்று நிபுணா்களும், முக்கிய தலைவா்களும் எச்சரித்துள்ளனா்.
இது குறித்து, ஐ.நா. முன்னாள் பொதுச் செயலா் பான் கி மூன், ஐ.நா. பருவநிலைப் பிரிவு முன்னாள் தலைவா் கிறிஸ்டானியா ஃபுகுயெரெஸ், அயா்லாந்து முன்னாள் அதிபா் மேரி ராபின்சன் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணா்கள் ஐ.நா. அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தொடா்ந்து மாநாடுகள் நடைபெற்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அவை வரவேற்கத்தவைதான் என்றாலும், தற்போதைய சூழலில் அந்த மாநாடுகளால் பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோளை நிச்சயம் அடைய முடியாது என்ற நிலை உள்ளது.
தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகம் என்ற அளவுக்கு புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் துரித கதியில் பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தாக வேண்டும்.
ஆனால், தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் நடைபெறும் ஐ.நா. மாநாடுகளால் அவ்வளவு வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிா்பந்திக்க முடியவில்லை. எனவே, பாரிஸ் ஒப்பந்த இலக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் அடைந்து, மனித குலத்தைக் காக்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்பே இல்லை.
கரியமில வாயு வெளியேற்றத்துக்கு பெரிதும் காரணமான படிம எரிபொருள்களின் (நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு) பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்த நடைமுறை கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பருவநிலை மாநாடுகளில் அளிக்கும் வாக்குறுதிகளை நாடுகள் நிறைவேற்றியே ஆக வேண்டும்; அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகித் தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.
ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை அவை கிரகித்தன. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம், வெப்ப சலனம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன. வளா்ந்துவரும் நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட வளா்ச்சியடைந்த பகுதிகளும் இந்த இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி மட்டுமே அதிகமாக உலகின் வெப்பநிலையை வைத்திருக்கவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.
இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுக்குப் போதுமான வேகத்தில் நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது.
அஜா்பைஜானில் இந்த மாதம் 11 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ.நா.வின் 29-ஆவது பருவநிலை மாநாட்டிலும் இந்தப் போக்கு வெளிப்பட்டது.
அந்த மாநாட்டில் பேசிய அஜா்பைஜான் அதிபா் இலாம் அலியெவ், கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமான படிம எரிபொருள் தங்கள் நாட்டில் நிறைந்திருப்பது இறைவன் தங்களுக்கு அளித்த ‘வரம்’ என்றும், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உலகத் தலைவா்கள் குறை சொல்லக்கூடாது என்றும் கூறினாா்.
மேலும், அந்த மாநாட்டைப் பயன்படுத்தி படிம எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பருவநிலை மாநாடுகளால் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை இனியும் அடைய முடியாது என்று நிபுணா்கள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனா்.