சாலையில் உலவிய காட்டெருமைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
உதகை- கோத்தகிரி சாலையில் வெள்ளிக்கிழமை உலவிய காட்டெருமை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், உதகை- கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு பகுதியில் காட்டெருமைகள் கூட்டம் வெள்ளிக்கிழமை உலவியதுடன், வாகனங்களை வழிமறித்து நின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
சிறிது நேரம் சாலையில் உலவிய காட்டெருமைகள் பின் வனப் பகுதிக்குள் சென்றன.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.