மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிவு
ராமேசுவரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமேசுவரம் மாந்தோப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபிகிருஷ்ணன் (30). லாரி ஓட்டுநா். இவரது மனைவி 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இந்த நிலையில், இந்திராநகா் பகுதியில் கோபிகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற லாரி அரசியல் கட்சி கொடிக் கப்பம் மீது மோதியது. இதில் இந்தக் கொடிக் கம்பம் உயரழுத்த மின் கம்பம் மீது சாய்ந்தது. லாரியிலிருந்து கீழே இறங்கி அந்த கொடிக் கம்பத்தை கோபிகிருஷ்ணன் அகற்ற முயன்றாா். அப்போது, கொடிக் கம்பத்தின் வழியாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கோபிகிருஷ்ணன் கடந்த 14-ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
இதுகுறித்து, கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அனுமதியின்றி கொடிக் கம்பம் நட்ட ஒப்பந்ததாரா் காளிதாஸ், திமுக நகா்மன்றச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் பிச்சை(எ)தட்சிணமூா்த்தி ஆகிய மூன்று போ் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.