சென்னை மத்திய சிறைக் கலவரம் நடந்து 25 ஆண்டுகள்!
சென்னையில் மத்திய சிறைச்சாலையில் பெருங் கலவரம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகளாகின்றன – 1999, நவ. 17!
இந்தக் கலவரத்தில் நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்ற துணை ஜெயிலர் எஸ். ஜெயக்குமார் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரத்தை அடக்கக் காவல்துறையினர் சுட்டதில் 9 கைதிகள் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கூடலூரைச் சேர்ந்தவரான ஜெயக்குமார், 1985-ல் சிறைத் துறையில் சேர்ந்து, உதவி ஜெயிலராக இருந்து துணை ஜெயிலராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார்.
இந்தக் கலவரம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்னை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுப் பொறுப்பேற்றிருக்கிறார்.
பணியில் மிக நேர்மையாக இருந்தவரான ஜெயக்குமார், சில நேரங்களில் கைதிகளிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் இதனாலேயே, குறிவைத்து ஜெயக்குமாரைக் கைதிகள் எரித்துக் கொன்றுவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
கைதிகள் தாக்கியதில் காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், இரு துணை ஆணையர்கள், 9 வார்டன்கள், 5 போலீசார் காயமுற்றனர்.
கலவரம் ஏன்? அந்தக் காலகட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் (அப்போது சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்தது) அடைக்கப்பட்டிருந்தார் ராயபுரத்தைச் சேர்ந்த பாக்ஸர் வடிவேலு (38) என்பவர். கடுமையான வயிற்றுவலி காரணமாக சில நாள்களாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல அன்றும் காலையில் மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்படும்போது, வழியிலேயே வடிவேலு இறந்துவிட்டார்.
காலை 8 மணியளவில் உணவுக்காகக் கைதிகள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, வடிவேலுவின் மரணச் செய்தி கிடைத்துப் பரவவும், உடனே கைதிகள் அனைவரும் கோஷங்களை எழுப்பிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கற்கள், ஓடுகள், விறகுகளை எடுத்து வார்டர்கள், காவலர்கள் மீது வீச, கட்டுப்படுத்த முடியாத நிலையில் உயர் காவல்துறை அலுவலர்கள் தலைமையில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
கட்டுக்குள் அடங்காமல் ரகளை தொடரவே, காவல்துறையினர் தடியடி நடத்தினர். தப்பியோடிய கைதிகள் உள்ளுக்குள் இருந்த கட்டடங்களின் மீதேறி நின்றுகொண்டு கற்களை வீசித் தாக்கினர். காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் கட்டுக்குள் வராத நிலையில் துப்பாக்கிகளால் சுட்டனர்.
சிறைக்குள் இருந்தவாறும் பூங்கா நகர் ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் இருந்தவாறும் (இங்கிருந்தும் அருகிலிருக்கும் சாலைப் பாலத்திலிருந்தும் சிறை வளாகத்தைப் பார்க்க முடியும்) காவல்துறையினர் சுட்டனர். இதில் 9 கைதிகள் உயிரிழந்தனர்.
இதனிடையே, சிறை வளாகத்திற்குள் கட்டுக்குள் அடங்காத கலவரம் காரணமாகத் தப்பிச் சென்ற துணை ஜெயிலரான ஜெயக்குமார், அருகிலிருந்த ஆவணக் காப்பக அறைக்குள் புகுந்தார். இதைத் தெரிந்துகொண்ட கைதிகள் சிலர், அந்த அறைக்கே தீவைத்தனர். அறைக்குள் இருந்த ஆவணங்களுடன் சேர்த்து ஜெயக்குமாரும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்தக் கலவரம் பற்றிய செய்தி வெளியில் பரவவும் சிறைக்குள் இருந்த கைதிகள் பலருடைய உறவினர்களும் சிறை வளாகத்தைச் சுற்றித் திரண்டு, காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கலவரத்திலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமுற்ற நூற்றுக்கணக்கான கைதிகள் அனைவரும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் அரசு பொது (தற்போதைய ராஜீவ் காந்தி) மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இங்கேயும் கைதிகளின் உறவினர்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் மறியலிலும் இறங்கவே அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை மிகவும் சிரமப்பட்டது.
வெறும் 1200 பேர் மட்டுமே இருப்பதற்கான இடவசதி மட்டுமே இருக்கும் சென்னை மத்திய சிறை வளாகத்தில் 2,000 கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே கைதிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்தக் கலவரத்தின் தொடர் விளைவாக, பெரிய அளவில் புழலில் மத்திய சிறை உருவாக்கப்பட்டது.
மறுநாள், சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு. கருணாநிதி, மத்திய சிறையில் நடந்த சம்பவம் வருந்தத்தக்கது, கண்டிக்கத் தக்கது; பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
பணியில் இருக்கும் ஒரு சிறைத் துறை ஜெயிலரை (ஜெயக்குமாரை) உயிரோடு எரித்தது மிகக் கொடுமையான விஷயம். அவருடைய மனைவிக்கு அவருடைய பெயர்ப் பட்டி மற்றும் அவர் அணிந்திருந்த நட்சத்திரத்தை மட்டுமே அடையாளமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது மிகக் கொடுஞ்செயல் என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.
கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதுடன், வீர தீரச் செயலுக்கான முதலமைச்சர் விருதும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கைதிகள் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் சிறைத் தண்டனை. அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் இழப்பால் அவரது குடும்பத்தினர் அவதிப்படுவதை அரசு விரும்பவில்லை. எனவே, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1.5 லட்சம் பாதுகாப்பு நிதியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இந்தச் சிறைக் கலவரத்தின்போது உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் மனைவி விமலா, பின்னர் படிக்கத் தொடங்கி மேற்படிப்புகளை முடித்ததுடன் தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சிறு குழந்தைகளாக இருக்கும்போது தந்தையை இழந்த மகள் சிவசங்கரி, மகன் சிவா இருவரும் மணம் முடித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரே ஒரு கலவரம் - ஒரு துணை ஜெயிலரும் 9 கைதிகளும் உயிரிழந்தனர். 25 ஆண்டுகளாக இவர்களுடைய குடும்பங்கள்தான் அதன் வலியைச் சுமந்துகொண்டிருக்கின்றன.