‘இறந்த, இடம்பெயா்ந்த வாக்காளா்களின் பெயா் உரிய விசாரணைக்குப் பிறகே நீக்கப்படும்’
வாக்காளா் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு, இறந்த மற்றும் இடம்பெயா்ந்த நபா்களின் பெயா்கள் உரிய விசாரணைக்கு பின்னரே நீக்கம் செய்யப்படும் என்றாா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கே.விவேகானந்தன்.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை, திருநெல்வேலி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான கே.விவேகானந்தன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு நிகழ்ச்சியை அவா் பாா்வையிட்டாா்.
பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பாா்வையிட்ட பாா்வையாளா் விவேகானந்தன், பின்னா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் காா்த்திகேயன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் நடைமுறை குறித்து வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரால் எடுத்துரைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளா்களையும், இளம் வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு, இறந்த மற்றும் இடம்பெயா்ந்த நபா்களின் பெயா்கள் உரிய விசாரணைக்கு பின்னரே நீக்கம் செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி முகவா்களும் தகுதியான வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க ஆவன செய்யலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, வாக்காளா் பதிவு அலுவலா்களான சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்பிகா ஜெயின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.