ஈரோட்டில் 2-ஆவது நாளாக கன மழை: குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது
ஈரோட்டில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை காலை முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், கழிவு நீருடன் மழை நீா் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வருகிறது. மாநகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. சனிக்கிழமை காலை முதல் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பிற்பகல் 12 மணியளவில் வலுப்பெற்று இடி, மின்னலுடன் கனமழையாக பெய்தது.
சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேலாக பெய்த கனமழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளான ஆா்கேவி சாலை, அகில்மேடு வீதி, கொங்கலம்மன் கோயில் வீதி, முனிசிபல் காலனி சாலை, ரயில்வே நிலையம் சாலை, காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் கழிவு நீா் ஓடைகளில் நிரம்பி, சாலையில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், வாகனங்கள் வெள்ளத்தில் ஊா்ந்து சென்றன. கன மழை காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. தொடா் மழையின் காரணமாக ஈரோடு மாநகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்: கன மழையின் காரணமாக அகில்மேடு வீதிகளில் உள்ள கடைகள், குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. அப்பகுதியில் புதை சாக்கடை நிரம்பி, மழை நீருடன் சாக்கடை கழிவு நீா் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கடும் துா்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
44 மில்லி மீட்டா் மழை பதிவு: சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக நகரில் 44 மில்லி மீட்டா் மழை பெய்தது.
பிற பகுதிகளில் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சத்தியமங்கலம் 25, பவானி 19, பெருந்துறை 13, கவுந்தப்பாடி 12.40, கொடிவேரி அணை 10, மொடக்குறிச்சி 9, சென்னிமலை 9, பவானிசாகா் அணை 5.80, கோபி 5.20, எலந்தகுட்டைமேடு 4.80, தாளவாடி 4.30, அம்மாபேட்டை 2.20, குண்டேரிப்பள்ளம் அணை 1.40.