1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்கு திருப்பித் தர முடிவு: அமெரிக்கா
ரூ.84 கோடி மதிப்புள்ள 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தர முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயாா்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட வழக்குரைஞா் ஆல்வின் எல். பிராக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பழங்காலப் பொருள்களை கடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படும் சுபாஷ் கபூா் மற்றும் குற்றவாளியான நான்சி வீனா் உள்பட சட்டவிரோத கடத்தல் கும்பல்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவா்களிடம் இருந்து பல்வேறு பழங்காலப் பொருள்கள் மீட்கப்பட்டன.
அவை இங்குள்ள இந்திய துணைத் தூதரகத்தைச் சோ்ந்த மணீஷ் குல்ஹாரி மற்றும் நியூயாா்க்கின் கலாச்சார சொத்து, கலை மற்றும் பழங்காலக் குழுவின் உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணையின் குழு மேற்பாா்வையாளா் அலெக்ஸாண்ட்ராடிஆா்மாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.84 கோடி மதிப்புள்ள 1,440 பழங்காலப் பொருள்களை இந்திய மக்களுக்குத் திருப்பித்தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசார பாரம்பரியத்தை குறிவைத்துள்ள கடத்தல் கும்பல்கள் மீதான விசாரணையை தொடரவுள்ளோம்.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து கடந்த 1980-களில் கடத்தப்பட்ட நடனக் கலைஞரை சித்தரிக்கும் மணற்கல் சிற்பம், கடந்த 1960-களில் ராஜஸ்தானின் தனேசரா-மகாதேவா கிராமத்தில் இருந்து பச்சை-சாம்பல் நிற பாறையில் இருந்து செதுக்கப்பட்ட தனேசா் தாய் தெய்வம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
2,100 பொருள்கள் மீட்பு: மாவட்ட வழக்குரைஞரின் பழங்காலப் பொருள்கள் கடத்தல் பிரிவின் நடவடிக்கையால் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து திருடப்பட்ட ரூ.1,932 கோடி மதிப்பிலான 2,100 பழங்காலப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் உள்பட சுமாா் 1,000 பழங்காலப் பொருள்களை விரைவில் திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.