``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கைக்கு சிஎன்ஜி பேருந்துகள்! தொலைதூர வழித்தடத்தில் திருச்சி-சென்னை முன்மாதிரி!
தமிழக அரசின் போக்குவரத்துக் கழக சிக்கன நடவடிக்கையாக தொலைதூர வழித்தடத்தில் திருச்சி - சென்னை பேருந்துச் சேவை முன்மாதிரியாக விளங்குகிறது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், டீசலுக்கு மாற்றாக, சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு வாயிலாக பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதில், திருச்சி-சென்னை வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தையும் முடிந்து, தற்போது பயணிகள் சேவையும் தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் கூடுதலாக மற்றொரு பேருந்தையும் சிஎன்ஜி பேருந்தாக மாற்றும் பணி திருச்சியில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெறுகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது இயக்கப்படும் பிஎஸ் 3 மற்றும் 4 ரகப் பேருந்துகளை, சிஎன்ஜி வகை பேருந்துகளாக மாற்றும்போது எரிபொருள் சேமிப்பு, பராமரிப்புச் செலவு குறைவு மற்றும் இயக்கச் செலவும் குறைகிறது.
டீசல் பேருந்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக ஒரு கி.மீ. ரூ.4.50 குறைக்க முடியும். சி.என்.ஜி. பேருந்துகளின் இயக்கத்தைப் பொருத்து போக்குவரத்துக் கழகங்களின் செலவில் குறைந்தபட்சம் 7 சதவீதம் முதல் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்கின்றனா்.
இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக இயக்குதல் பிரிவு வட்டாரத்தினா் கூறுகையில், சிலிண்டா் கிட் பொருத்த அதன் அளவுக்கு தகுந்தபடி ரூ. 6.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது. பொதுவாக மாநகரப் பேருந்துகள் ஒரு லிட்டா் டீசலில் 4.76 கி.மீ. வரை செல்லும். இதன்படி, ஒரு கி.மீ.க்கு ரூ. 19.03 செலவாகும். ஆனால், சிஎன்ஜி பேருந்தை இயக்கும்போது ரூ.18.47 செலவாகும். இது மாநகரப் பேருந்துகளுக்கானது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளைக் கணக்கிட்டால் ஒரு கிமீ-க்கு டீசல் என்றால் ரூ.15.80, சிஎன்ஜி என்றால் ரூ.11.24 செலவாகும். 7 போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தலா 2 சிஎன்ஜி பேருந்துகளை சோதனை ஓட்டத்தில் இயக்கியதில் அரசுக்கு ரூ. 7.65 லட்சம் சேமிப்பாகியுள்ளது.
அதன்படி சேலம் கோட்டத்தில் ரூ.2.09 லட்சம், திருநெல்வேலி- ரூ.1.58 லட்சம், கும்பகோணம்- ரூ.1.25 லட்சம், மதுரை ரூ.1.58 லட்சம், விழுப்புரம் ரூ.46 ஆயிரம், கோவை ரூ.68 ஆயிரம் எனச் சேமிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்ட முயற்சியாக தொலைதூர வழித்தடத்தில் சென்னை-திருச்சிக்கு சிஎன்ஜி பேருந்துச் சேவை முன்மாதிரியாகத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்ததால், தற்போது பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது சென்னையில் ஒரு மாநகரப்பேருந்து, ராமநாதபுரத்தில் 2 நகரப் பேருந்து, விழுப்புரத்தில் 2 (காஞ்சிபுரம்-சென்னை, செங்கல்பட்டு-சென்னை), மதுரையில் 3 (ஒரு நகரப் பேருந்து, அருப்புக்கோட்டைக்கு 2), கோவையில் 2 (ஈரோடு-மதுரை பொள்ளாச்சி-கோவை), சேலத்தில் 2, ஈரோடு 2, தூத்துக்குடி 2, கும்பகோணத்தில் 3 என மொத்தம் 19 பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக மேலும் 2 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.
திருச்சியிலிருந்து-சென்னைக்கு இரவு 10 மணிக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 9 மணிக்கும் சிஎன்ஜி பேருந்து இயக்கப்படவுள்ளது என்றனா்.
பேருந்து மாற்றச் செலவை ஈடுகட்ட முடியுமா?
மத்திய அரசின் சட்ட விதிகளின்படி பிஎஸ்-6 ரக பேருந்துகளை இயக்க வேண்டிய சூழலில், அந்த வகை பேருந்துகளை புதிதாக வாங்க பல கோடி செலவாகும். ஆனால், பழைய பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் பிஎஸ்-6 ரகச் செயல்பாட்டை எய்த முடியும். ஒரு பேருந்துக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் செலவிட்டால் சிஎன்ஜி பேருந்தாக மாற்ற முடியும்.
அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனைகளையே பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் செலவை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்குவதால் கிடைக்கும் சேமிப்பில் 8 மாதங்களிலேயே ஈடுகட்ட முடியும். இந்தியாவில் மகராஷ்டிர போக்குவரத்துக் கழகத்தில்தான் பழைய பேருந்துகளை அதிகளவில் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றியுள்ளனா்.
அரசுப் பேருந்துகளில் பயன்படுத்தும் எரிவாயுக்கு ஜிஎஸ்டி விலக்கு, மானியம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்கினால், மகராஷ்டிரத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் தமிழகத்தில் உடனடியாக 1,500 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றவும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தயாராகவுள்ளது என்கின்றனா் தொழில்நுட்பப் பணியாளா்கள்.