தொழுகை உரைக்கு முன்அனுமதி: சத்தீஸ்கா் வக்ஃப் வாரியம்
பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று அந்த மாநில வக்ஃப் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மசூதிகளுக்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது நாட்டில் முதன்முறையாகும்.
இதுகுறித்து சத்தீஸ்கா் மாநில வக்ஃப் வாரியத் தலைவா் சலீம் ராஜ் அளித்த பேட்டியில், ‘மசூதிகளில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் ஜும்மா தொழுகைக்கு முன்பு இமாம்கள் ஆற்றும் உரைகளில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது. சில சமயங்களில் மசூதிகளால் வழங்கப்படும் போதனைகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு உள்ளன.
மசூதிகள் மத ரீதியிலான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட வேண்டுமே தவிர அரசியல் அமைப்பாக இருக்கக் கூடாது. எனவே, வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்கு, வக்ஃப் வாரியத்தை அணுகி முன்அனுமதி பெறுமாறு அனைத்து மசூதிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.
மசூதிகள், தா்காக்கள் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், எனது அறிவுரை மூலம் நான் எந்த வரம்பையும் மீறவில்லை. அதேபோல், சிறுபான்மையினருக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.