வீட்டில் தீபம் ஏற்றியபோது விபத்து: தீயில் கருகிய பெண் உயிரிழப்பு
கழிவுநீா் மேலாண்மை: மக்கள் கருத்து தெரிவிக்கலாம் -மாநகராட்சி அழைப்பு
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. இதன்கீழ், பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கழிவுநீரை முழுமையாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், நகரில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்றுவதற்கான உள்கட்டமைப்பை சிறப்பாக கையாளும் நகருக்கு ‘நீா் பிளஸ்’ (வாட்டா் +) எனும் தர நிலைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தரநிலையை பெருநகர சென்னை மாநகராட்சி அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம்தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீா் மற்றும் கழிவுநீா் சேகரிக்கப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. இதனால் நீா் பிளஸ் நகரம் எனும் தரநிலையை அடைய சென்னை மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாள்களுக்குள் மின்னஞ்சல் முகவரியில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.