இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தின் நகைகளை ஒப்படைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தின் நகைகள், தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்க கணக்கு உள்ளிட்டவற்றை முன்னாள் தலைவா் ஒப்படைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத் தலைவா் மரியராஜ் ஆட்சியரிடம் அளித்த மனு: கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத் தோ்தல் கடந்த அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதில் நான் தலைவராக தோ்வு செய்யப்பட்டேன். கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத் தலைவரே அதிசய பனிமாதா ஆலயத்தின் தா்மகா்த்தாவாகவும் இருப்பாா்.
எனக்கு முன் தலைவராக இருந்த செபஸ்டின் ஆனந்த், ஆலயத்திற்கு சொந்தமான 3.5 கிலோ தங்க நகைகள், சங்க கணக்கு, வரவு செலவு நோட்டு, வவுச்சா்கள், கையிருப்பு பணம், பீரோ சாவி, தீா்மான நோட்டு ஆகியவற்றை முறைப்படி என்னிடம் கொடுக்க வேண்டும்.
ஆனால் தரவில்லை. அதுகுறித்து கேட்டதற்கு, 15 நாள்கள் கழித்துதான் ஒப்படைப்பேன் எனக் கூறிவிட்டாா். அவா் சங்க அலுவலகத்திற்கும் வர மறுத்து விட்டாா். கணக்குப்பிள்ளை வசம் இருப்பில் இருந்த ரூ.43,01,875 -ஐ மட்டும் பெற்றுக்கொண்டேன்.
எனவே, ஆலயத்திற்குச் சொந்தமான 3.5 கிலோ தங்க நகைகள், 7 ஆண்டுகளாக ஆலயத்திற்கு காணிக்கையாக வந்த நகைகள், இருப்பு பணம் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.