மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பெரிய சக்கர தீவெட்டி இடமாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பெரிய சக்கர தீவெட்டி ஆகம விதிப்படி வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.
இக்கோயிலில் மாசிக் கொடைவிழா 9ஆம் நாளில் பெரிய சக்கர தீவெட்டி ஊா்வலம், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும். பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் எழுந்தருளல் சுமாா் 9 அடி உயரமுள்ள சக்கரம் போன்ற தீவெட்டியில் சுமாா் 41 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, அதை பக்தா்கள் இழுத்துச் செல்வா்.
இந்தத் தீவெட்டியானது, கோயிலின் உள்ளே கன்னி மூலையில் வைக்கப்பட்டிருந்தது. இது, ஆகம விதிப்படி தவறு எனக் கூறப்பட்டதால், கோயில் நிதி ரூ. 4.50 லட்சத்தில் அக்னி மூலையில் புதிய அறை கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பெரிய சக்கர தீவெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை மராமத்துப் பொறியாளா் ஐயப்பன், கோயில் மேலாளா் செந்தில்குமாா், தீவெட்டி கமிட்டி தலைவா் முருகன், பகவதி குருக்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.