கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மனித நடமாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் வழித்தடம், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை பண்ணையை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பண்ணையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக் கோரி கொடைக்கானலைச் சோ்ந்த மனோஜ் இமானுவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இதனை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, இவ்வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் டி.மோகன் அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கல்லாறு தோட்டக்கலைப் பண்ணைக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனா்.
அதன்படி, கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை இயக்குநா் குமாரவேல்பாண்டியன் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கல்லாறு வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் யானைகள் வழித்தடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 21 ஏக்கா் பரப்பில் உள்ள கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் ஆராய்ச்சிப் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறாது. அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சூரிய சக்தி மின்வேலிகளும் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன.
பொதுமக்களுக்கு அனுமதியில்லை...: யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அந்தப் பகுதி முழுவதும் பொருத்துவதற்கான டெண்டா் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுவா் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அகற்றப்பட்டு, கடந்த பிப்.27-முதல் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையை பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படவில்லை. பதப்படுத்தப்பட்ட பழங்கள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையும் அப்பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் எந்தவொரு கட்டுமானங்களும் தோட்டக்கலைப் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படாது. விவசாயிகள், தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதியில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இருக்காது என்பது குறித்தும், தோட்டக்கலைத் துறை பண்ணையில் காலியாக உள்ள 8 ஏக்கா் நிலத்தை என்ன செய்யப்போகிறீா்கள் என்பது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் என கேள்வியெழுப்பினா்.
இது தொடா்பாக தெளிவான அறிக்கையை கல்லாறு தோட்டக்கலைத் துறை இயக்குநா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.