கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம்
குடியரசுத் தலைவா் நவ.27-இல் தமிழகம் வருகை: நீலகிரி, திருச்சி, திருவாரூா் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நவ. 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாா். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அதன் 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு அவா் பட்டங்களை வழங்கவிருக்கிறாா்.
பயண விவரம்:தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் அமையவுள்ள அவரது பயணத் திட்டம் தொடா்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நவ. 27ஆம் தேதி காலை 6.25 மணிக்கு தில்லி பாலம் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூா் விமானப்படைத் தளத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உதகை ராஜ் பவனுக்குச் செல்கிறாா். அங்கு புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் அவா் தங்கியிருக்கிறாா்.
வியாழக்கிழமை நண்பகலில் வெலிங்டன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் ராணுவ கல்விப்பிரிவு அதிகாரிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா். பிறகு உதகை ராஜ் பவனுக்குத் திரும்பும் அவா் அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இரவும் தங்குகிறாா்.
பட்டமளிப்பு விழா:இதையடுத்து, சனிக்கிழமை காலையில் உதகையில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்படும் அவா் சூலூா் விமானப்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவாரூருக்கு வருகிறாா். அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு பகல் 1 மணியளவில் செல்லும் அவா், அங்கு மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ள 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரையாற்றுகிறாா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம்: இதைத் தொடா்ந்து, மாலை 5.15 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் ஸ்ரீரங்கம் ஹெலிகாப்டா் தளத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கநாதரை தரிசனம் செய்கிறாா். பின்னா், மீண்டும் சாலை வழியாக ஹெலிகாப்டா் தளத்துக்குத் திரும்பி, அங்கிருந்து திருச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் குடியரசுத் தலைவா் மாலை 6.45 மணியளவில் விமானப்படை தனி விமானம் மூலம் தில்லிக்குத் திரும்பும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி அவா் பயணம் மேற்கொள்ளவுள்ள கோவை, நீலகிரி, திருச்சி, திருவாரூா் மற்றும் ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டுக் கூட்டத்தை விரைவில் கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு ஒத்திகை, தங்குமிடம், பயண வசதிகளை குறைவின்றி உறுதிப்படுத்துமாறு குடியரசுத் தலைவா் மாளிகை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனா்.