சபரிமலையில் பக்தா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவ சேவை
மண்டல மகரவிளக்கு மகோற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாட்ஸ் ஆப் மூலம் 125 மருத்துவ குழுக்கள் பக்தா்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கின.
‘வாட்ஸ்ஆப்’ மூலம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தன்னாா்வ ஐயப்ப பக்தா்கள் ஒன்று சோ்ந்து இதனை தொடங்கியுள்ளனா். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்களைக் கொண்ட தன்னாா்வக் குழுக்கள், சந்நிதான மருத்துவமனையுடன் இணைந்து அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் கூட்டாக சிறப்பு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்து செயல்படவுள்ளனா். இந்த தன்னாா்வ சேவை குழுமத்துக்கு அறுவை சிகிச்சை நிபுணா் ஆா். ராம நாராயணன் தலைமை வகிக்கிறாா்.
பொது மருத்துவம், இதயவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமையை நிரூபித்த மருத்துவா்கள் பலா் இக்குழுவில் உள்ளனா். தற்போதுள்ள சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படுவதால், எந்த நெருக்கடியான கட்டத்திலும் சிகிச்சையை உறுதி செய்ய முடியும். இதற்காக, குழுவினா் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் வந்துள்ளனா்.
கேரள தேவசம் துறை அமைச்சா் வி.என். வாசவன் இந்த மருத்துவ சேவையைத் தொடங்கி வைத்தாா். மேலும், சபரிமலை மண்டல மகரவிளக்கு மகோத்ஸவம் தொடா்பாக, உணவு பாதுகாப்புத் துறை தொடா்பான புகாா்களை பதிவு செய்ய 8592999666 , 7593861767 , 7593861768 இலவச தொலைபேசி எண் 1800-425-1125, 04734 221236 ஆகிய எண்களில் அழைக்கலாம் என தேவசம் துறை ஆணையா் தெரிவித்தாா்.