உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 13 வீரா்களுக்கு ரூ. 5.99 லட்சம் நிதி: துணைமுதல்வா் வழங்கினாா்
வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள 13 வீரா், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் மொத்தமாக ரூ. 5.99 லட்சம் நிதியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக விளையாட்டு வீரா், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் நிதி பிரச்னை காரணமாக பங்கேற்க முடியாமல் தவிக்கும் சூழலை மாற்ற, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி, போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்கான நிதியினை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன் அடிப்படையில், 2024 டிசம்பா் 1 முதல் 8-ஆம் தேதி வரை மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 10-ஆவது ஆசிய பசிபிக் காது கேளாதோா்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 11 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான மொத்தத் தொகையாக ரூ.2.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
நிதி உதவி: தென்கொரிய நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான வாள்வீச்சு
விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள வீராங்கனை பி.சசிபிரபாவுக்கு விமானக் கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவுக் கட்டணத்துக்கான தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
எகிப்து நாட்டில் நடைபெறும் சா்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள பாரா பேட்மிட்டன் விளையாட்டு வீரா் ஜெகதீஸ் டில்லிக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்துக்காக ரூ.1,79,184-க்கான காசோலை என மொத்தம் 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.5,99,184-க்கான காசோலை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.