`இவன் ஜெயிச்சு தந்த தங்க காசத்தான் தாலில போட்டிருக்கேன்' - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சத்தியபிரியா
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் வாய்ப்பிற்காக காத்திருந்த காளைகளின் நீண்ட வரிசையில், வீரத்தமிழச்சி சத்தியபிரியா தன்னுடைய காளையுடன் காத்திருந்தார்.
அவரைச் சந்தித்துப் பேசியபோது, ``நாங்க இங்க குறவங்குளத்துல இருந்து வந்திருக்கோம். எங்க வீட்டுல கிட்டத்தட்ட 50 வருசமா பால் மாடோட சேர்த்து காளை மாடும் வளர்த்துட்டு இருக்கோம். இங்க இருக்கான்ல.. இவன் பேரு வெள்ளையன்.. உள்ளூர் காரன் தான்.. இவன எங்க தம்பி மாதிரி வளக்குறோம் .
எல்லா பொங்கலுக்கும் வாடிக்கு கூட்டிட்டு வந்துருவோம். நல்ல சூப்பர் மாடு, அவுக்குற எல்லா வாடிலயும் பரிசு அடிச்சுருவான். வருசம் வருசம் தங்க காசு ஜெயிச்சுருக்கு, அந்த தங்க காசத்தான் என் தாலில போட்டிருக்கேன். வீட்டுல இருக்கப்ப நல்லா சாதுவா எல்லார் பேச்சையும் கேட்டு நல்ல புள்ளையா இருக்கும். வீட்டுல இருக்க எங்க குட்டி பாப்பா எல்லாரும் கிட்ட போவாங்க அதுபாட்டுக்கு இருக்கும்.. வாடிக்கு வந்தா அவன் வேற மாறி... சேட்டைய காட்டிருவான்.. அலங்காநல்லூர் வாடிக்கு இதோட ஐந்தாவது தடவ அவுக்குறோம். கண்டிப்பா இதுலயும் பரிச அடிக்க தான் போறான்.." என்று சிரித்த முகத்தோடு வெள்ளையன் மீது நம்பிக்கையுடன் கூறி களம் காணச் சென்றுவிட்டார்.