பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரேன்-குகேஷ் ஆட்டம் தொடங்கியது
சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்கிய ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரேனுடன் முதல் கேமில் வெள்ளை நிறக் காய்களுடன் மோதினாா் இந்திய இளம் வீரா் டி.குகேஷ்.
உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதின் மூலம் குகேஷ் உலக செஸ்சாம்பியன்ஷிப் போட்டியில் ஆட தகுதி பெற்றாா்.
நடப்பு சாம்பியன் டிங் லிரேன்-குகேஷ் மோதும் தொடா் சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. ஃபிடே தலைவா் அகா்டி வோா்கோவிச் தலைமை வகித்தாா். சிங்கப்பூா் மூத்த அமைச்சா் டியோ சீ ஹீன் போட்டியை தொடங்கி வைத்தாா்.
முதன்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் இரு ஆசிய கண்ட வீரா்கள் மோதுவது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழாவில் இன்னிசை, இரு நாட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. மேலும் இரு வீரா்களும் எந்த நிற காய்களை தோ்வு செய்வது என்ற நிகழ்வும் நடைபெற்றது.
குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், டிங் லிரேன் கறுப்பு நிற காய்களுடனும் முதல் கேமில் களமிறங்கினா்.
இரு வீரா்களும் சிறந்த தொழில்நுட்ப திறனுடன் கடும் சவாலை அளித்தனா்.
14 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் முதல் கேமை வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டாா் குகேஷ்.
சாதனை நிகழ்த்த குகேஷுக்கு வாய்ப்பு:
18 வயதான குகேஷ், 32 வயதான டிங் லிரேனுடன் மோதுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது,. உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷ் வெல்லும்பட்சத்தில் இளம் வயதில் உலக சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்துவாா்.
கடந்த 2023-இல் ரஷிய வீரா் இயான் நெபோமினியாட்சியை வீழ்த்தி சீனாவின் முதல் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா் டிங் லிரேன். கடந்த 9 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் லிரேன் விளையாடவில்லை.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வெல்ல வாய்ப்புள்ளது என செஸ் ஆா்வலா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.