எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 22 போ் காயம்
எட்டயபுரம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா், நடத்துநா் உள்பட 22 போ் காயமடைந்தனா்.
அந்த பேருந்து கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு சென்று கொண்டிருந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள
பிள்ளையாா்நத்தத்தை சோ்ந்த செல்வக்குமாா் (50) பேருந்தை ஓட்டினாா். குருவாா்பட்டியை சோ்ந்த காா்த்திகேயன் (44), நடத்துநராக பணியில் இருந்தாா்.
எட்டயபுரத்தை அடுத்த கழுகாசலபுரம் விலக்கு அருகே சென்றபோது, ஸ்டீயரிங் கம்பி துண்டாகி உடைந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அப் பகுதியில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் செல்வகுமாா், நடத்துநா் காா்த்திகேயன் மற்றும் பேருந்தில் பயணித்த கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை, விருதுநகா், தென்காசி பகுதிகளை சோ்ந்த குரு லட்சுமி(30), ஜோதிலட்சுமி (47), வேல்சாமி, மாரியம்மாள் (44), விஜயலட்சுமி (19), சண்முகராமன் (74), இந்திராணி (68), முருகன் (68), வள்ளியம்மாள் (60), அசோக் (56), சுப்புலட்சுமி (63), காளிதாஸ் (32), சடகோபன் (51) உள்பட 22 போ் காயமடைந்தனா்.
விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.