சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் ரஜினி வாரம், கமல் வாரம், விஜய் வாரம், அஜித் வாரம், சூர்யா வாரம் என்று அவ்வப்போது ஒரு வாரம் முழுவதும் மதியத்திலோ, இரவிலோ தொடர்ச்சியாக ஒவ்வொரு நடிகரின் படங்களை ஒளிபரப்பிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் (சில நேரங்களில் சில நடிகர்கள் சில வாரங்கள் விடுபடவும் நேரிடலாம்).
திரைத்துறை - தொலைக்காட்சித் தாக்கம் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதாலோ என்னவோ அப்படியே அதேபாணியில் முந்தைய வாரம் மருத்துவர்கள் வாரம் என்றால் கழிந்த வாரம் வழக்குரைஞர்கள் வாரம்!
தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாகச் சில நாள்களாக வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். இந்தப் போராட்டங்களின் மூலம் வழக்குரைஞர்களின் சாலிடாரிட்டியும் அதாவது ஒற்றுமையும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது, மருத்துவர்களைப் போலவே.
போராட்டம் சரிதான், ஒற்றுமையும் சரிதான். ஆனால், போராடுவதற்கான காரணம்?
வெட்டப்பட்டவர், ஒசூரிலுள்ள நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணி செய்துகொண்டிருப்பவர். வெட்டியவரோ வக்கீல் குமாஸ்தா. இவர் தற்போது வேறொரு வழக்குரைஞரிடம் வேலை செய்துகொண்டிருக்கிறார். ஏற்கெனவே, இவர் வெட்டப்பட்டவரிடம் பணியாற்றியவர், பிறகு விலகிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். ஆனால், உண்மை உடனடியாகத் தெரியவில்லை.
வெட்டியவரின் மனைவியும் வழக்குரைஞரே. அவரும் இதே நீதிமன்றத்தில்தான் வேறொரு வழக்குரைஞரிடம் ஜூனியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வழக்குரைஞரை குமாஸ்தா ஏன் வெட்ட வேண்டும்? அந்த அளவுக்கு ஏன் அவர் ஆத்திரப்பட வேண்டும்?
“வெட்டப்பட்டவர் எனது மனைவியிடம் அடிக்கடி பேசிவந்தார். இவ்வாறு அவர் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே இதுபற்றிப் பலமுறை அந்த வழக்குரைஞரிடம் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. மேலும், என் மனைவிக்கு போன் செய்வது, ஆபாசமாகப் பேசுவது எனத் தொடர்ந்தார். எனவே, ஆத்திரத்தில் அவரை வெட்டினேன்” என்று குமாஸ்தா தெரிவித்திருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு பெண்ணுக்கு மற்றொரு ஆண் அளித்த தொடர் பாலியல் தொல்லை காரணமாகப் பெண்ணின் கணவர் வெட்டியுள்ளார். இவ்வளவுதான் வெளியே கூறப்படுகிற அல்லது தெரிய வருகிற விஷயம். இங்கே ஆணும் பெண்ணும் வழக்குரைஞர்கள் என்பதும் வெட்டிய கணவர் வக்கீல் குமாஸ்தாவும் என்பதால் நீதித்துறை விஷயமாகிவிட்டது போல.
வெட்டப்பட்ட நபர் எவ்வளவு காலமாக இந்தப் பெண்ணுக்குப் பாலியல்ரீதியிலான தொல்லை அளித்துவந்தார்? ரத்தம் சிந்துகிற அளவுக்குச் சென்ற இதை ஏன் முன்னதாகத் தடுக்க முடியவில்லை?
இந்தக் கொலை முயற்சி வழக்கு விசாரணையின்போது, இவை அனைத்தும், இன்னும் வெளியே தெரியாதிருக்கக் கூடிய விஷயங்களும்கூட வெளிப்படலாம். தற்போது வழக்குரைஞரை வெட்டிய கணவரும், உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
[இந்த எபிசோடில் பெரிய நகைமுரண்: ஓராண்டுக்கும் மேலாகப் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணும் ஒரு வழக்குரைஞர்தானே? ஏன் அவருக்காக ஒரு வழக்குரைஞர்கூட – அல்லது பெண் வழக்குரைஞர்கள்கூட – குரல் கொடுக்கவில்லை?]
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருக்கிற உண்மைகள் / தகவல்கள் அனைத்துமே சாதாரண மக்களுக்குத் தெரியாமல்போயிருந்தாலும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்திச் சில நாள்களாக நீதிமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்த வழக்குரைஞர்கள் அமைப்புகளுக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே இதே (நீதிமன்ற) வளாகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, சிஎஸ்ஆர் (சமூகசேவைப் பதிவு சான்று அல்லது புகார் மனுப் பதிவுச் சான்று)-ம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; ஆனால், இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, ஒசூர் வழக்குரைஞர்கள் சங்கத்திலும்கூட புகார் செய்யப்பட்டதாகவும் ஆனால், அங்கேயும் சமாதானம்தான் பேசப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, நோ ஆக்.ஷன்! நோ ரிசல்ட்!
வெட்டப்பட்ட வழக்குரைஞர் இதைப் பற்றியெல்லாம் கவலையேபடவில்லை போல. இந்தப் பிரச்சினை, அதாவது, குறிப்பிட்ட பெண்ணுக்கு எதிரான, வெட்டப்பட்டவருடைய பாலியல் டார்ச்சர் மட்டும் எவ்விதத் தடங்கலுமின்றி ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நள்ளிரவுகளிலும் பெண் வழக்குரைஞருக்குத் தொலைபேசி அழைப்புகள். விடாது துரத்திக்கொண்டிருந்த இம்சை. காவல்துறையாலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும் கைவிடப்பட்ட நிலையில், கட்டிய மனைவிக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பவரை என்னதான் செய்வது? எவ்வாறு தடுத்து நிறுத்துவது? கடைசியாக சம்பந்தப்பட்ட வக்கீல் குமாஸ்தாவின் கைக்குக் கிடைத்ததுதான் அரிவாள்!
மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி நீதிமன்றங்களில் பணிகள் தடைப்பட முன்வைக்கப்பட்ட காரணம் அல்லது கோரிக்கை - ‘வழக்குரைஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்பதே. ஏனெனில், ஒசூரில், வழக்குரைஞர் அங்கி அணிந்திருந்த நிலையில் அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து வெட்டப்பட்டார் என்பதுதான். இந்த ஒரு விஷயத்தைத் தவிர, வேறு எதற்காகவும் – அவருடைய வேறெந்தச் செயலுக்காகவும் - வெட்டப்பட்ட வழக்குரைஞருக்காக எந்த வழக்குரைஞராலும் வக்காலத்து வாங்க இயலாது!
‘நீதிமன்ற வளாகத்திற்குள்’ என்று கூறுவதிலும் இடியாப்பச் சிக்கல் இருக்கிறது, உள்ளூர்க்காரர்களுக்குத் தெரியும். இங்கே நீதிமன்ற வளாகம் என்பது வெறும் நீதிமன்றங்கள் மட்டுமே இருக்கிற வளாகம் அல்ல. இந்த வளாகத்திற்குள்தான் அனைத்து மகளிர் காவல்நிலையம் இருக்கிறது, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இருக்கிறது, வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம்... எல்லாமும் இருக்கின்றன. கூடவே வழக்குரைஞர்களின் அலுவலகங்கள், தேநீர்க் கடைகள் எல்லாமும்கூட! ஆக, மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்தப் பகுதியில் குறிப்பிட்ட வழக்குரைஞர் வெட்டப்படும்போதுகூட பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் அல்லது சிலர் விடியோ எடுத்திருக்கிறார்கள். ஆக, இந்தப் பகுதியை எக்ஸ்க்ளூசிவாக நீதிமன்ற வளாகம் என்று அழுத்திக் குறிப்பிடுவதுகூட நியாயமாகப்படவில்லை.
(விவசாயிகள் விளைநிலத்தில் வெட்டிக்கொள்வார்கள், தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்துக்குள் வெட்டிக்கொள்வார்கள், மீனவர்கள் கடலுக்குள்ளே வெட்டிக் கொள்வார்கள், இங்கே நீதித் துறையினர், நீதிமன்றங்களும் இருக்கும் வளாகத்தில் வெட்டிக்கொண்டிருக்கின்றனர்!).
இந்த சம்பவத்துக்காகத்தான் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தினர்; தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் முடங்கின அல்லது முடக்கப்பட்டன. இதனால் எத்தனை நூறு வழக்கு விசாரணைகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும்? எத்தனை தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கும்? எத்தனை பிணைகள் கிடைக்காமல் போயிருக்கும்? ம்.
ஒரு நாள் ஒரு ஒத்திவைப்பில், ஒரு மாற்றத்தில், சில நேரங்களில் ஒரு தலைமுறையேகூட பாதிக்கப்பட நேரிடும் என்று குறிப்பிடும் நீதித்துறை நண்பர் ஒருவர், ‘குறிப்பிட்ட நாளில் அது நடந்திருந்தால் நிலைமையே வேறு, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கும்’ என்கிற தருணங்கள் இங்கே ஏராளம் என்றும் இவற்றைப் பாதிக்கப்பட்டவர்களால் மட்டும்தான் உணர முடியும் என்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் நீதித் துறைச் செயல்பாடுகள், வழக்குரைஞர்களின் நடத்தைகள், காவல்துறை – வழக்குரைஞர்கள் இடையிலான உறவு போன்றவை பற்றியெல்லாம் பேசத் தொடங்கினால் நாள் முழுவதுமே பேசிக்கொண்டிருக்கலாம் (ஆமாம், நீதித் துறையில் வழக்குரைஞர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் பற்றி விசாரிப்பதற்காக, தீர்வு காண, விசாகா கமிட்டி போன்ற அமைப்புகள் எதுவுமில்லையா?).
இதைப் போலவே, நம் நாட்டில், நம் மாநிலத்தில், நம் நகர்களில் மேலும் பல போராட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னை போன்ற மாநகர்களில் ஏதேனும் ஓரிடத்தில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்குமோ, நடத்துநருக்குமோ யாருடனாவது சண்டை நடந்திருக்கும். இன்றைய செல்போன் உபயத்தில் அடுத்த கணம் மாநகரம் முழுவதும் தகவல் பரவ, ஒட்டுமொத்தமாக அத்தனை பேருந்துகளும் சட்டென நின்றுபோய்விடும். அதுவா, அது ஏதோ அடிதடியாம், பிரச்சினை முடிந்தால்தான் பஸ்ஸெல்லாம் ஓடும் என்று ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இறங்கிப் போய்விடுவார்கள். இதுவே ஒரு மாலை நேரமென்றால் ஒட்டுமொத்த நகரமே கதிகலங்கிப் போய்விடும். அமைச்சரில் தொடங்கி அத்தனை அரசு, காவல்துறை அலுவலர்களும் இறங்கிவந்து பேசினால்தான் போராட்டம் முடிவுக்கு வரும். வேலைக்காக வெளியே வந்தவர்களால் வீடுகளைச் சென்றடைய முடியும்! என்ன துயரம்?
சில வேலைநிறுத்தங்களை, போராட்டங்களை அரசும் அலுவலர்களும் மிகவும் எளிதாகக் கையாளுவார்கள். ஏனென்றால், இந்தப் போராட்டங்களால் நேரடியாக அல்லது உடனடியாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதில்லை. சில துறைகளில் சில நாள்கள் அல்ல, சில வாரங்களே நீடித்தாலும்கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மருத்துவம், நீதித்துறை, போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளில்...?
சில போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல; தேவையானவையும்கூட. மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை லாரியேற்றிக் கொலை செய்தால்... போராடாமல் என்ன செய்ய முடியும்? ஆனால், கையூட்டளித்தவருடன் நேரிட்ட மோதலில் அலுவலகத்தில் அரசு ஊழியர் தாக்கப்பட்டார் என்பதற்காகப் போராட முடியுமா?
மருத்துவர் வாரத்துக்கும் வழக்குரைஞர் வாரத்துக்கும் இடையே இன்னொரு முக்கியமான வாரம் விடுபட்டுவிட்டது, ஆசிரியர்கள் வாரம்!
ஆனால், உண்மையில் இது போராட்டத்துக்குரிய, போராடியிருக்க வேண்டிய பிரச்சினை - மல்லிப்பட்டினத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஆசிரியையை இளைஞர் குத்திக் கொன்ற சம்பவம். என்ன காரணத்தாலோ வெறும் செய்தியாக, ஆங்காங்கே ஆசிரியர் அமைப்புகள் நடத்திய சில ஆர்ப்பாட்டங்களுடனும் ரூ. 5 லட்சம் முதல்வர் நிதி உதவியுடனும் கழிந்துபோய்விட்டது. ஒருவேளை அவர் தாற்காலிக ஆசிரியை என்பதோ, அவர் எந்த சங்கத்திலும் இன்னமும் சேர்ந்திராமல் இருந்திருக்கலாம் என்பதோ காரணங்களாக இருக்கலாம்.
அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் போராடும்போது, வேலைநிறுத்தம், போராட்டம், பணிப் புறக்கணிப்பு போன்றவற்றால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்க, அதிருப்தியான சூழல் காரணமாக அரசுக்கு மறைமுகமாக நெருக்குதல் ஏற்பட, எத்தகைய கோரிக்கைகள் என்றாலும் ஏற்றுக்கொள்ள, அல்லது இறங்கிவர நேரிட்டு விடுகிறது அரசுக்கு.
சரியோ, தவறோ, இதுபோன்ற போராட்டங்களை அரசு ஊழியர்களாலும் அமைப்புகளாகத் திரண்டிருப்பவர்களாலும் சீருடை அணிந்து பணியாற்றுவோராலும்தான் எளிதில் நடத்த முடிகிறது; தவறே இழைத்திருந்தாலும் தங்களைச் சேர்ந்தவர் என்பதால் காப்பாற்றவும் முடிகிறது!
போராட்டங்கள் மிகவும் அவசியமே. போராடாமல் விடிவு கிடைக்காது. ஆனால், எதற்காகப் போராடுகிறோம்? யாருக்காகப் போராடுகிறோம்? எப்போது போராடுகிறோம்? என்பதெல்லாமும்கூட போராட்டங்களை முன்னெடுப்பவர்களால் அதே அளவுக்குக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள், கூடவே, இத்தகைய போராட்டங்களால் ஒரு பாவமும் அறியாத, இவற்றுக்கெல்லாம் எந்த வகையிலும் சம்பந்தப்படாத சாதாரண மக்கள் படுகிற அவதிகளும்!
* * *
அணுகுண்டுகளும் ஈரச் சாக்கும்!
அதானி குழும நிறுவனங்கள் மீது கடுமையான மோசடிப் புகார்களைக் கடந்த ஆண்டு அமெரிக்காவிலுள்ள பங்குச்சந்தை தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் எழுப்பியிருந்தது; சான்றுகளுடன் வெளிப்படுத்தியது. பங்குச் சந்தை குழம்பிப் போய் அதானி நிறுவனப் பங்குகள் சரிந்தன. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இதுபற்றிய வழக்கில் பங்குச்சந்தைக் கண்காணிப்பு அமைப்பான செபி மூலம் விசாரணை நடத்த உத்தரவை பிறப்பித்தது நாட்டின் உச்ச நீதிமன்றம்.
தொடர்ந்து, சில மாதங்களில் இந்த செபி தலைவர் மாதவி புச்சுக்கு / அவருடைய கணவருக்கே அதானி தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாக, தொடர்புகள் இருப்பதாக அம்பலப்படுத்தியது அதே ஹிண்டன்பர்க் ரிசர்ச். மறுபடியும் எதிர்க்கட்சிகள் கூக்குரல். போராடி நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை வரைக்கும் கொண்டுவர, விசாரணைக்கு வருவதையே தவிர்க்கிறார் மாதவி.
இப்போது என்னடாவென்றால், அதானி குழுமத்தின் லஞ்ச – ஊழல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவிலுள்ள நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, கௌதம் அதானிக்கு பிடி ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போதும் எதிர்க்கட்சிகள் கூக்குரல்தான். ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ, பிரதமர் நரேந்திர மோடியோ கொஞ்சமும் அசைந்துகொடுப்பதாக இல்லை (விலைமதிப்பு மிக்க தாராவி நிலப் பகுதிகளை எல்லாம் அதானிக்கு அள்ளிக்கொடுக்கிறார்கள்; ஆட்சிக்கு வந்ததும் அத்தனையையும் ரத்து செய்வேன் என்ற உத்தவ் தாக்கரே இடம் பெற்ற காங்கிரஸ் அணியோ மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டது).
கண்ணீர்ப் புகைக் குண்டுகளைத்தான் ஈரச் சாக்கில் அமுக்கி செயலிழக்கச் செய்யலாம்; அதெப்படி அணுகுண்டுகள் எல்லாமும்கூட அடிபணிந்துபோகின்றன, மக்களுக்குதான் வெளிச்சம்!
* * *
டிரம்ப் ஸ்டைல்!
அடுத்து அமையவிருக்கும் அரசில் இடம் பெறுவோர் பெயர்களைத் தொடர்ச்சியாக வெளியிடுவதன் மூலம் அடுத்தடுத்து அமெரிக்காவுக்குள்ளேயே அணு (அறிவிப்பு) குண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறார் அதிபர் (தேர்வு) டொனால்ட் டிரம்ப். ஒவ்வொருவரும் ஒருவிதம், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் அட்டர்னி ஜெனரல் (நல்லவேளை, அவரே விலகிக்கொண்டுவிட்டார்)! இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் அவரிடமிருந்து, உற்சாகமாக இருக்கிறார் டிரம்ப்.