Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?!
Doctor Vikatan: என் வயது 45. சர்க்கரை நோய் இருக்கிறது. எனக்கு சமீபகாலமாக பார்வையில் சில பிரச்னைகள் இருக்கின்றன. நீரிழிவு பாதித்துவிட்டாலே, கண் பார்வையில் பிரச்னை வரும், அது போகப் போக தீவிரமாகும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினருக்கும் மேல் நீரிழிவால் ஏற்படும் பார்வை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்களை இருவிதங்களில் பாதிக்கும். ஒன்று, 'கேட்டராக்ட்' (cataract) எனப்படும் கண்புரை. அடுத்தது 'டயாபட்டிக் ரெட்டினோபதி' (diabetic retinopathy) எனப்படும் பாதிப்பு. இதில் கண்களின் விழித்திரை பாதிப்புக்குள்ளாகும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் அலட்சியம் செய்தால், ஒரு கட்டத்தில் கண் பார்வையை இழக்க நேரிடலாம். கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு வந்தால், அதைச் சரிசெய்துவிடலாம். அதற்கு இன்று நிறைய நவீன சிகிச்சைகள், லேட்டஸ்ட் அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன.
பார்வை நரம்பு பாதிக்கப்பட்டால் அது மருத்துவர்களுக்கே சற்று சிரமமானதாகத்தான் இருக்கும். நீரிழிவு பாதிப்பின் காரணமாக ரத்தக்குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்படும். இதற்கு 'விட்ரியஸ் ஹெமரேஜ்' (Vitreous hemorrhage) என்று பெயர். இதை கவனிக்காமல் விட்டால் விழித்திரையே தகர்ந்துபோகும் அளவுக்கு ரிஸ்க் ஏற்படும். இது சற்று சீரியஸான பிரச்னை. எனவே, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். கண்புரை பாதிப்பு மட்டும்தான் இருக்கிறது என்றால் அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து பார்வையை மீட்கலாம்.
நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் பிரத்யேக டெஸ்ட்டுகள் செய்ய வேண்டியிருக்கும். 'ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி' (Optical coherence tomography) எனப்படும் டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு 'ஃப்ளோரோசீன் ஃபண்டஸ் ஆஞ்சியோகிராபி' (Fluorescein fundus angiography). இதில் கை வழியே டை போன்ற திரவத்தைச் செலுத்தி, உள்ளே எங்கெல்லாம் ரத்தக் கசிவு இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதன் பிறகு லேசர் அல்லது பிரத்யேக இன்ஜெக்ஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இவற்றை எல்லாம் மீறி, விழித்திரை தகர்ந்துவிட்டால், ரெட்டினல் டிடாச்மென்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். எனவே, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.