சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது சாத்தியமா?!
போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் ஜூலை மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் இந்த மூவருக்கும் பொறுப்பு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தன.
அதேவேளையில், இந்த பிடிவாரன்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளை பொறுத்து அமையும். இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், பல ஐரோப்பிய நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறியுள்ளன.
மே மாதம், சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலன்ட், டெய்ஃப் மற்றும் கொல்லப்பட்ட இரண்டு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனி மற்றும் யாஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்தான் இவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க கோரிய மனுவுக்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் நோக்கத்தோடு ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காசாவில் குறைந்தது 44,000 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணையின்போது ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப், கொலை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு என்பதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக கண்டறிந்தது. மேலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இஸ்ரேலின் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதற்கும் காரணங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
அதேநேரம் இதே குற்றச்சாட்டுகளுக்காகவும், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை வேண்டுமென்றே வழிநடத்திய மேலதிகாரிகளாக நெதன்யாகு, யோவ் கேலன்ட் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டாலும், நெதன்யாகு, யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எந்த உடனடி அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், இவர்கள் வெளிநாடு செல்வதற்கு இந்த பிடிவாரன்ட் தடையாக இருக்கலாம். அதையும் மீறி, சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு சென்றால், அவர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நெதன்யாகுவின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணம் அமெரிக்காவுக்கு சென்றது. ஆனால், அமெரிக்கா ஐசிசி எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை. எனினும், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனாலும், இந்த நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த உள்நாட்டு சட்ட செயல்முறை அனுமதிக்க வேண்டும். கடந்த ஆண்டு நெதன்யாகு இங்கிலாந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் இவர்கள் யாரையும் கைது செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதேநேரம், ஐரோப்பிய நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளுக்கு இணங்குவதாக உறுதியளித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு கூறினாலும், சொன்னபடி கைது செய்யுமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், உக்ரைனில் நடந்த போர்குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், செப்டம்பரில் அண்டை நாடான மங்கோலியாவுக்கு சென்றபோது அவர் கைது செய்யப்படவில்லை. மாறாக, அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதேபோல் பல உதாரணங்கள் உள்ளன.
சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், இது மனிதகுல வரலாற்றில் ஒரு இருண்ட நாள் என்றும், சர்வதேச நீதிமன்றம் மனிதகுலத்தின் எதிரியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும், இது ஒரு யூத எதிர்ப்பு நடவடிக்கை என்றும், என்னைத் தடுப்பது, நம்மை அழிக்கும் முயற்சியில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான இயற்கையான உரிமையை தடுப்பது என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்ரேல் அரசையும், ஹமாஸின் கொலைகாரத் தலைவர்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துகிறது. மேலும், தீர்ப்பு குழந்தைகளைக் கொல்வது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது ஆகியவற்றை சட்டபூர்வமாக்குகிறது" என்று கேலன்ட் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்போ, முகமது டெய்ஃப் மீதான பிடிவாரன்ட் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு எதிரான பிடிவாரன்ட் என்பது வரலாற்று முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளது. மேலும், நமது மக்களுக்கு எதிரான வரலாற்று அநீதியின் நீண்ட பாதையில் ஒரு திருத்தம் என்றும் கூறியது.
மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சர்வதேச நீதிமன்றத்தால் யாரையும் கைது செய்ய முடியாது. அந்தந்த நாடுகளின் காவல் துறைகளுக்கு உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய முடியாததே இதற்குச் சான்று’ என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.