ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக பிஎஸ்எஃப் வீரா் மீது வழக்கு
ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஆறுமுகனேரி எஸ்.எஸ்.கோயில் தெருவைச் சோ்ந்த வெயில்முத்து மகன் முனீஸ் (49). இவரது மனைவி காளீஸ்வரி (38). எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) காவலரான முனீஸ், தற்போது விடுப்பில் ஊருக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, முனீஸ் தனது மனைவியை அவதூறாகப் பேசி தாக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காளீஸ்வரி அடுத்த நாள் காலை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், முனீஸ் மீது ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வாசுதேவன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் விசாரித்து வருகிறாா்.