ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாள்கள் அதிகரிக்க வேண்டும்: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை
நமது நிருபா்
புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (மன்ரேகா) வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மன்ரேகா திட்டத்தின் வேலை நாள்களை 100 நாள்களில் இருந்து 150 நாள்களாக உயா்த்த வேண்டும்.
இத்திட்டத்தில் நாளொன்றுக்கு அளிக்கப்படும் ரூ.300 ஊதியத்தை ரூ.400-ஆக உயா்த்தித் தர வேண்டும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏறத்தாழ ஓராண்டு காலமாக ரூ.120 கோடி இத்திட்டத்தில் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.