முதல் 2 வாரம் படத்தை விமர்சிக்கக் கூடாது; FDFS ரிவ்யூவுக்கு நோ; திருப்பூர் சுப்ர...
எம்பிபிஎஸ் மாணவர் பலி: ராகிங் செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு!
குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ராகிங் காரணமாக பலியானதைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அனில் மெதானியா எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவருடன் சேர்த்து 11 முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கடந்த சனிக்கிழமை (நவ. 16) இரவு ஹாஸ்டல் அறைக்கு ராகிங் செய்வதற்காக அழைத்துள்ளனர்.
இரண்டாமாண்டு மாணவர்கள் 15 பேர் இணைந்து அவர்கள் 11 பேரை 3 மணி நேரம் அறைக்குள் நிற்க வைத்து பாட்டுப் பாட வைத்தும் ஆட வைத்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அறையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.
இதில், மூன்று மணி நேரம் நின்றதால் மாணவர் அனில் மெதானியா திடீரென மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் கூடுதல் டீன் அனில் பாதிஜா மற்றும் உயிரிழந்த மாணவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் 15 மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் ராகிங் தடுப்புக் குழு தலைவரான டீன் ஹர்திக் ஷா இந்த சம்பவம் தொடர்பாக 26 மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து நீக்கி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.