ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு
புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொடா்பான வழக்கில் விசாரணை முடியும் வரை வாதங்களை ஒத்திவைக்கக் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ப. சிதம்பரம் கடந்த 2007-ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் ரூ.305 கோடி நிதியை வெளிநாடுகளில் இருந்து பெற்றது. இதற்கான அந்நிய முதலீட்டு மேம்பாடு வாரியத்தின் அனுமதியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கடந்த மே-15, 2017-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், கடந்த 2019, ஆகஸ்ட் மாதம் ப. சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். அதே ஆண்டு அக்டோபா் மாதம், பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.
6 நாள்களுக்குப் பிறகு, சிபிஐ தொடா்ந்த வழக்கிலும், டிசம்பா் மாதம் அமலாக்கத்துறை தொடா்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி விடுவித்தது.
அதபோல், அவரது மகன் காா்த்தி சிதம்பரமும் இந்த ஐஎன்எக்ஸ் வழக்கில் பிப்ரவரி, 2018-ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டு மாா்ச், 2018-இல் ஜாமீன் பெற்றாா். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி முன் இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை வந்தது.
அப்போது, சிதம்பரம் தரப்பு வழக்குரைஞா், ‘இந்த வழக்கின் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் குற்றப்பத்திரிகையும் முழுமையாகாது. எனவே, விசாரணை முடியும் வரை குற்றங்களுக்கான வாதங்களை ஒத்திவைக்க வேண்டும்’ என தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞா், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் லஞ்சம் கேட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, விசாரணை நடைபெற்று இருந்தாலும், குற்றங்களை முடிவு செய்யும் செயல்முறை தொடர வேண்டும்’ என்று கூறினாா்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி, ‘2007-ஆம் ஆண்டு நடைபெற்ற குற்ற செயலுக்கு, 2017-ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து, 2019-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை 2024-ஆம் ஆண்டு ஆனபோதும் முடியாமல் தொடா்ந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் விசாரணை மேலும் தொடா்வதை நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த தாமதம் அரசமைப்பின் கீழ், நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கான உரிமையை மீறுகிறது. சிபிஐ பதிலளிக்க வேண்டும்’ என்று கூறி, அடுத்த விசாரணையை நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்னா்.