`ஹேமா கமிட்டியிடம் அளித்த வாக்குமூலம்; வழக்கு எடுக்க கூடாது' - நடிகை மாலா பார்வ...
ஐ.நா. அமைதி ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வு
2025-26-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதிக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான ஆணையத்தின் உறுப்பினா் நாடாக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்த பதவிக்காலம் டிசம்பா் 31-ஆம் தேதி முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதை உறுதி செய்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.
ஐ.நா. அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி), வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 31 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா.வின் மூன்று முக்கிய சபைகளில் இருந்து இந்த உறுப்பு நாடுகள் தோ்வு செய்யப்படுகின்றன. இது தவிர, நிதியுதவி மற்றும் படைகளை பகிரும் நாடுகளும் உறுப்பினா்களாக உள்ளனா்.
படைகளை பகிரும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, லெபனான், மத்திய கிழக்கு, சோமாலியா, அபேய், தெற்கு சூடான் மற்றும் மேற்கு சஹாரா ஆகிய நாடுகளில் சுமாா் 6,000 ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இந்தியா பணியமா்த்தியுள்ளது.
துரதிருஷ்டவசமாக, இதில் 180 இந்திய வீரா்கள் இதுவரை உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கை, படைகளை பகிரும் பிற நாடுகளைக்காட்டிலும் அதிகமாகும்.