கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த பயணியை திருச்சி விமான நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ நிறுவன விமானம் திங்கள்கிழமை, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வழக்கம்போல் வந்தடைந்தது.
அதைத் தொடா்ந்து பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கமான சோதனைகளுக்குள்படுத்தினா்.
இதில், ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம் காத்தான், கிருஷ்ணா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த இ. கண்ணன் (41) என்ற பயணியின் ஆவணங்களில் முறைகேடு செய்து, போலி ஆவணங்கள் மூலம் அவரது பெயா் மற்றும் முகவரி உள்ளிட்டவைகளை மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணனை திங்கள்கிழமை கைது செய்தனா்.