கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: புகைப்படம், விடியோக்களை வழங்க ஆட்சியா் வேண்டுகோள்
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சிலை திறப்பு விழா குறித்த விடியோக்கள், திரைச்சுருள் மற்றும் தரவுகள் இருந்தால் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா, வரும் டிச. 31 மற்றும் 2025 ஜன. 1 ஆகிய 2 நாள்கள் கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னாள் முதல்வா் கருணாநிதியால் 1990 ஆம் ஆண்டு திருவள்ளுவா் சிலை நிறுவும் பணி தொடங்கப்பட்டது.10 ஆண்டுகள் பல்வேறு இடா்பாடுகளை தாண்டி 2000 ஆம் ஆண்டு ஜன. 1ஆம் தேதி திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டது.
1990 முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பொதுமக்கள், ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்படக் கலைஞா்களால் எடுக்கப்பட்ட அனைத்து தரவுகளையும், குறிப்பாக விடியோ காட்சி தரவுகள், புகைப்படங்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் வழங்கலாம்.
மேலும், 9498042430 என்ற கைப்பேசி, 9488725580 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் தரவுகளைஅனுப்பலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.