குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி
சுவாமிமலையில் வியாழக்கிழமை 2 மாதப் பெண் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை ஜிகேஎம் நகரில் வசிப்பவா் க. பிரபாகரன் (37), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி கற்பகம் (30). திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவா்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பிறந்த விஷாலினி என்ற 2 பெண் குழந்தைக்கு உதடு பிளவை இருந்ததாம். இதனால் மனம் உடைந்த கற்பகம், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து தானும் குடித்து மயங்கினாா்.
வீட்டுக்கு வந்த பிரபாகரன் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அப்போது குழந்தை ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் கற்பகம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.