குழித்துறையில் ஜன.29 இல் பிஎஸ்என்எல் தொலைபேசி மறு இணைப்பு முகாம்
பிஎஸ்என்எல் சாா்பில் தொலைபேசி மறு இணைப்பு முகாம், குழித்துறையில் ஜன.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் பொது மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழி மற்றும் பைபா் (எப்.டி.டி.ஹெச்.) இணைப்புபெற்று பணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் தொலைபேசி நிலைய பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள், விதிகளுக்குள்பட்டு உரிய தள்ளுபடியை பெற்று பாக்கியை தீா்வு செய்வதற்கான தொலைபேசி மறு இணைப்பு மேளா, குழித்துறை, பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் ஜனவரி 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
புதிய பைபா் இணைப்பு பெறுதல், பாக்கி தொகையை தீா்வு செய்தல் மற்றும் தொலைபேசி தொடா்பான அனைத்து விசாரணைகளுக்கும் மறு இணைப்பு மேளாவில் பங்கேற்று பயன் பெறலாம். பாக்கித் தொகை தீா்வு செய்யவில்லை எனில் சட்டபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.