கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதல்வர் வேலை இல்லை: எடப்பாடி பழனிசாமி
சேலம்: முதல்வர் கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் மேட்டூர் காவிரி உபரி நீரை கொண்டு 100 ஏரிகளில் நிரம்பும் திட்டத்தை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வைத்தார். இதற்காக அவருக்கு காவேரி உபரிநீர் மீட்பு குழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. மேச்சேரி எம் காளிப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று எடப்பாடி பழனி்சாமி பேசியதாவது:
இதுநாள்வரை நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தற்போது விவசாயிகள் ஒன்றுகூடி நடத்தும் நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்றது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பாக்கியம்.
விவசாயிகளின் துயரம் முழுமையாக தெரிந்ததால் 100 ஏரி திட்டத்தை கொண்டு வந்தேன். மேட்டூர் அணையில் இருந்து நீரேற்று மூலம் வறண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்புவது எளிதான விஷயம் அல்ல. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரூ.525 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்தி முதல்கட்டமாக திட்டத்தின் ஒருபகுதியை நானே திறந்து வைத்தேன்.
இந்த திட்டத்தில் விடுபட்ட ஏரிகளை மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் நீரேற்று மூலம் தண்ணீர் நிரப்பபடும். அதிமுக ஆட்சியில் 70 சதவிகித பணிகள் முடிவடைந்தது. ஒரு ஆண்டிலேயே முடிக்க கூடிய மீதி பணியை அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே அடுத்து ஆட்சி பொறுப்பேற்று 42 மாதங்களாகியும் திமுக அரசு அந்த பணியை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது என குற்றம்சாட்டினார்.
விவசாயிகளுக்கு நீர்தான் உயிர்
அனைத்து கட்சிகளிலும் விவசாயிகள் இருப்பதால் இதில் ஏன் அரசியல் பார்க்க வேண்டும். அதிமுகவை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இந்த திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவரவில்லை. உடலுக்கு உயிர் எப்படியே; அப்படியே விவசாயிகளுக்கு நீர்தான் உயிர்.
விவசாயிகள் மனம் வேதனை
விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. ஏரிகள் வறண்டு கிடக்கும் போது மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை கண்டு விவசாயிகளின் மனம் வேதனை அடைகிறது.
கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை
முதல்வர் கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். 110 ஏரி திட்டத்தில் இதுவரை 46 ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்; அப்போது இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறும். வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது திமுக அரசு.
இதையும் படிக்க |அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார் இபிஎஸ்: துணை முதல்வா் உதயநிதி
நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதுதான ஸ்டாலின் வேலை
முக்கெம்பு அணையை கட்டியது அதிமுக; திறந்து வைத்ததப திமுக. நாம் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலை.திமுக திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அதிமுக கொண்டு வந்தது.
காவிரி நதி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை
50 ஆண்டுகாலமாக காவிரி நதி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
விவசாயிகள் பற்றி திமுகவுக்கு கவலை இல்லை
விவசாயிகள் பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. தனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்பதே திமுகவின் நோக்கம்.
அரசுக்கும் வருவாய் கிடைக்கிறதோ இல்லையோ, அவர்களது கஜானாவுக்கு வருவாய் வருகிறதா என்று மட்டுமே பார்க்கும் அரசுதான் திமுக அரசு.
இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளன் உதயநிதி. அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார்; மகன் அப்பாவை புகழ்ந்து பேசுவதான் வேடிக்கை.
விவசாயிகளின் நிலங்களை காத்தது அதிமுக அரசு
திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக காட்சி அளித்தது. பின்னர் அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டலமாக மாற்றப்பட்டது. விவசாயிகளின் நிலங்களை பிடிங்கி தனியாருக்கு கொடுத்தது திமுக; ஆனால் விவசாயிகளின் நிலங்களை காத்து பாதுகாப்பு கொடுத்தது அதிமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.