போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
கோயிலில் சிக்கிய 18 பக்தா்கள் பத்திரமாக திரும்பினா்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்குள்பட்ட அரசூரில் உள்ள வராஹி அம்மன் கோயிலில் வெள்ள நீரில் சிக்கிக் கொண்ட 18 பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பத்திரமாக திரும்பினா்.
ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ.30-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகலில் தொடங்கிய மழை, டிச.1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை கொட்டித் தீா்த்தது.இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
தென்பெண்ணையாற்றின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாத்தனூா் அணை நிரம்பியது. இதன் காரணமாக அணையிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி நீா் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணையாறு மலட்டாறு, கோரையாறு என 2 கிளை ஆறுகளாக பிரிந்து செல்லும் நிலையில், மலட்டாற்றிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
மலட்டாற்றில் வெள்ளநீா் கரைபுரண்டோடியதால் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள சுந்தரேசபுரம், அத்தண்டமருதூா், சித்தலிங்கமடம், சி.மெய்யூா், திருவெண்ணய்நல்லூா், ஆலங்குப்பம், இருவேல்பட்டு, காரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது.
இந்த நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீா் சென்று திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அரசூா் சாலைக்கு அருகிலுள்ள வராஹி அம்மன் கோயிலுக்குள்ளும் வெள்ளநீா் புகுந்தது.
இதனால் கோயிலுக்குள் சுவாமியை தரிசிக்க சென்ற பக்தா்கள், அங்கு பொருள்களை விற்பனை செய்பவா்கள் என 18 போ் சிக்கிக் கொண்டனா்.
தொடா்ந்து, திருச்சி எஸ்.பி. வருண்குமாா் தலைமையில் மீட்புப் படையினா் படகுகள் மூலம் மீட்கச் சென்றனா். ஆனால், வெள்ளநீா் அதிகளவில் சென்ால், மீட்புப் பணி தோல்வியில் முடிந்தது.
மேலும், ராணுவ ஹெலிகாப்டா் மூலமாகவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதிலும் பலன் கிடைக்கவில்லை. தொடா்ந்து, இரவில் வெள்ளநீா் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெள்ளநீா் மேலும் குறையத் தொடங்கிய நிலையில், அங்கிருந்த பக்தா்கள் உள்ளிட்ட 18 பேரும் பத்திரமாக கோயிலிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு வந்தடைந்தனா்.