அவதூறு வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சமரசமான கங்கனா ரணாவத் - ஜாவேத் அக்தர்!
சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி
சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பெலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு இத்தீா்ப்பை வழங்கியது.
கடந்த 1944-ஆம் ஆண்டின் சுங்க சட்டம் மற்றும் மத்திய கலால் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதித்துறை நடுவரிடம் இருந்து வாரண்ட் பெற வேண்டும் என்று கடந்த 2011-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பைத் தொடா்ந்து, சுங்க சட்டப் பிரிவு 104-இன்கீழ் குறிப்பிட்ட சில வழக்குகளில் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டின் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வழக்குகளில் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளுக்கு எதிராக ராதிகா அகா்வால் என்பவா் உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். சுமாா் 280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களில் சுங்க சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கும் பிரிவுகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம்- அரசமைப்புச் சட்டத்துடன் பொருந்தவில்லை என்றும், இப் பிரிவுகளை செல்லாதவையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை ஒருமனதாக தீா்ப்பளித்தது. தனது மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சாா்பில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 63 பக்க தீா்ப்பை எழுதினாா். இதே கருத்துக்கு இணக்கமாக 13 பக்க தனி தீா்ப்பை நீதிபதி பெலா எம். திரிவேதி எழுதினாா்.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய பல தீா்ப்புகளை சுட்டிக் காட்டியுள்ள நீதிபதிகள், ‘சுங்கத் துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் அல்லா் என்றபோதிலும், உரிய சட்டங்களின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் அவா்களுக்கு உள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவுகள், நாட்டின் சட்டத்துக்கு இணக்கமானதாக உள்ளன. தன்னிச்சையான-தவறான கைது நடவடிக்கைகளை தடுப்பதற்குப் போதுமான பாதுகாப்பை, அந்தப் பிரிவுகள் வழங்குகின்றன’ என்றனா்.
அதேபோல், சம்பந்தப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் உரிமை குறித்தும் தீா்ப்பில் விளக்கமளித்துள்ள நீதிபதிகள், ‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகுதான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. பொருத்தமான சந்தா்ப்பங்களில் முன்ஜாமீன் மனுக்களை அனுமதிக்கலாம். நிபந்தனை அடிப்படையிலும் முன்ஜாமீன் வழங்கப்படலாம்’ என்று தெரிவித்துள்ளனா்.