தமிழ்நாட்டில் மான்கள் பெயரில் உள்ள 241 ஊர்கள்; வரலாற்று ஆய்வில் வெளிவந்த அரிய த...
``டிடிவி தினகரனைச் சந்தித்து ஆலோசித்தேன்" - அண்ணாமலை சொல்வது என்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கிவிட்டது.
அதன் ஒரு கட்டமாகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை விவகாரங்கள் பொதுவெளிக்கு வருகின்றன. பா.ஜ.க-வுடன் இனி எப்போது கூட்டணி இல்லை என அறிவித்த அ.தி.மு.க, தற்போது பா.ஜ.க கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.மு.மு.க தலைவர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மீதும் அதிருப்தி தெரிவித்திருந்த டிடிவி தினகரன், அண்ணாமலை இருந்தவரை பா.ஜ.க-வின் கூட்டணி அரவணைப்பு சிறப்பாக இருந்தது எனவும் ஊடகங்களிடம் பேசினார்.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரனுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
இந்த நிலையில்தான், நேற்று முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இது தொடர்பாக, ராதிகா சரத்குமாரின் தாயார் மரணம் குறித்து துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணாமலை அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``டிடிவி தினகரன் தொடர்ந்து பயணத்தில் இருந்தார். அவர் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுகூட சென்னையிலிருந்து அல்ல.

எனவே, தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்தவரிடன் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்தேன். அவர் சென்னை வந்ததும் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தேன்.
அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் கிடையாது. எனவே, அவரிடம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனபது குறித்து பேசினேன்.
தொடர்ந்து அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேட்டேன். நம்மை நம்பி என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தவர்களிடம் தொடர்ந்துபேசிக்கொண்டிருக்கிறேன்.
நவம்பருக்குப் பிறகு டிடிவி தினகரன் முடிவை கூறுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், தேர்தல் சூடு வரும்போது எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் ஒ.பன்னீர் செல்வத்தையும் சந்திப்பேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.