திருச்சியில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி இரவு வரையில் பனிப் பொலிவுடன் பரவலாக விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையே வானம் கருமேகத்துடனேயே காணப்பட்டது. அதோடு கடும் பனிப்பொலிவும் காணப்பட்டது. அதிகாலையே சாரல் மற்றும் தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், லேசானது முதல் மிதமான மழையாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
காலையில் பெய்த மழையால் கூலித் தொழிலாளா்கள், தனியாா் நிறுவனப் பணியாளா்களும் அவசரம், அவரசமாக தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனா். பள்ளி, கல்லூரி, பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவா்கள் மழையில் நனைந்தபடியும், குடைகள் பிடித்துக் கொண்டு, மழைக்கால ஆடைகளை அணிந்தபடியும் சென்றனா். பள்ளிக் குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோா் உதவியுடன் வாகனங்களில் சாரல் மழையில் நனைந்தபடியே செல்ல நேரிட்டது.
மேலும், மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரும்சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
திருச்சி மாநகரம் மட்டுமல்லாது திருவெறும்பூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், உறையூா், திருவரங்கம், திருவானைக்கா என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை 6.30 மணிக்குத் தொடங்கிய மழையானது இரவு வரை இடைவிடாது பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடமாடும் உணவகங்கள், சாலையோரக் கடைகள் மழை காரணமாக திறக்கப்படவில்லை.
பிற்பகலுக்கு மேலும், மாலையிலும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட நேரிட்டது. முதியோா்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க நேரிட்டது. மழை நின்றிருந் நேரங்களில் மட்டுமே சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. புயல் சின்னம் காரணமாக புதன்கிழமையும் மழைநீடிக்கும் என வானிலையாளா்கள் தெரிவித்துள்ளனா்.