நீலகிரி: விண்ணதிர முழங்கிய பழங்குடி இசைக்கருவிகள்; மக்கள் வெள்ளத்தில் அருள்பாலித்த பொக்காபுரத்தாள்!
மலை மாவட்டமான நீலகிரியில் அமையப்பெற்றுள்ள வன தெய்வ கோயில்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனமான முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் இந்த அம்மன் கோயிலில் உள்ளூர் பழங்குடி மக்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர் திருவிழாவைக் காண கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் திரள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரக ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்றிரவு தொடங்கியது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.
பழங்குடி மக்களின் பாரம்பர்ய இசைக்கருவிகள் முழங்க நடன ஆரவாரத்துடன் பக்தர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சிம்ம வாகனத்தில் நீலப்பட்டுடுத்தி அருள்பாலித்த பொக்காபுரம் அம்மனை விடிய விடிய ஆராதித்து கோயிலைச் சென்றடையச் செய்தனர். வழி நெடுகிலும் உப்பையும் பூக்களையும் தூவி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தேர் திருவிழா குறித்து பகிர்ந்த பக்தர்கள், "கடந்த 7 - ம் தேதி கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜையுடன் திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கங்கை பூஜையும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கரகம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. மிக முக்கிய நிகழ்வான அம்மன் தேர் பவனி நேற்றிரவு தொடங்கியது. பழங்குடி மக்களின் பாரம்பர்ய இசைக்கருவிகள் விண்ணதிர ஒளி வெள்ளத்தில் அருள்பாலித்தாள் எங்கள் பொக்காபுரத்தாள்" என்றனர்.