நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்: ராகுல் காந்தி
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது.
”இன்று விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2400 ஆக உள்ளது. வரும் காலத்தில் எங்கள் ஆட்சி அமைந்தவுடன், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 3200 ஆக உயர்த்தி ஜார்க்கண்ட் விவசாயிகளுக்கு வழங்குவோம்.
இதையும் படிக்க: வேலையில்லா திண்டாட்டத்தில் மக்கள்... அதானிக்கு வேலை செய்யும் அரசு! ராகுல்
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சிப்போம்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சொந்தமான ரூ. 1.36 லட்சம் கோடியை, மத்திய அரசு தர மறுக்கிறது. இவை நில இழப்பீட்டுத்தொகை, நிலக்கரி காப்புரிமை போன்றவற்றிற்கானதாகும். ஜார்க்கண்ட்டிற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது” என்று பேசினார்.