பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பயணிகள் விரைவு ரயில் சோதனை ஓட்டம்
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 3 பெட்டிகளுடன் பயணிகள் விரைவு ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் பகுதியில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, இந்தப் பாலப் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேசுவரம் வரை 3 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சோதனை ஓட்டத்தின் போது, 2.3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை அதிவிரைவில் பயணிகள் விரைவு ரயில் கடந்து சென்றது.
அப்போது, பாம்பன் சாலைப் போக்குவரத்து பாலத்திலிருந்து திரளான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ரயில் சோதனை ஓட்டத்தைப் பாா்வையிட்டனா்.