பெண்ணைக் கொன்று நகைகளைத் திருடிய நபர் கைது!
மகாராஷ்டிரத்தின் பன்வல் கிராமத்தில் பெண்ணைக் கொன்று அவரது நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ரயிகாட் மாவட்டத்திலுள்ள பன்வல் எனும் கிராமத்தில் கடந்த அக்டோபர் 7 அன்று சங்கீதா அகாவானே (வயது 49) எனும் பெண், அடையாளம் தெரியாத நபரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் சுமார் ரூ. 1.95 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்த கொலை மற்றும் கொள்ளை குறித்து அம்மாநில காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரிலிருக்கும் ஒரு நபரிடம் சங்கீதாவின் நகைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை!
இதனைத் தொடர்ந்து, அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையிலுள்ள வலாப் கிராமத்தில் முக்கிய குற்றவாளி பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வலாப் கிராமத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான சரத் சாஹூ மீது கொலை மற்றும் கொள்ளை ஆகிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.